பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

103

முகம் ஏன் கடுமை பாய்ந்த அமைதியில் ஆழ்ந்து போயிருக்கிறது? சினம், துயரம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த முகத்தில் காண முடியாது.

“தேவி, இரதம் முற்றத்தில் வந்து நிற்கிறது. வந்து ஏறுங்கள்!”

அவள் உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் வண்ணமிழக்கின்றன.

“இதோ...” அவள் எழுந்து அவனைப் பின் தொடருகிறாள்.


10

அரண்மனையின் வெளிவாயிலில்தான் இரதங்கள் வந்து நிற்பது வழக்கம். உள்ளே அந்தப்புர மாளிகைகளுக்குச் செல்லும் முற்றத்தில் பல்லக்கு மட்டுமே வரும். ஆனால் இரதம் உள்ளே வந்திருக்கிறதென்று சொல்லிவிட்டு, “உடனே வர வேண்டும்” என்று அவர் முன்னே விரைந்து நடக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டு நடக்கிறார்.

கோசலாதேவியின் மாளிகைக்குத்தான் செல்வார். மன்னர் அங்கேதான் இருப்பாராக இருக்கும்... அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மிகவும் கோபமாக இருப்பாரோ என்று உள்ளுணர்வில் ஒரு கலக்கம் படிகிறது. இது... இவர் செய்வது, தமையனின் ஆணையா? தமையனில்லை; கணவர் என்ற உறவும் இல்லை... மன்னர்... மாமன்னர் ஆணை,,. இந்தச் சூழலிலும் அவளுக்குச் சிரிப்பு வரும் போல் இருக்கிறது.

கானகத்தில் வாழ்ந்தபோது மான் இறைச்சி பதம் செய்து அவளுக்கு ஊட்டவே முன்வருவார். அவள் மறுப்பாள்... “இங்கே வேறு நல்ல உணவு கிடையாது. வெறும் புல்லையும் சருகையும் உண்டு நீ தேய்ந்தால், ஏற்கெனவே நூலிழை போல் இருக்கும் இடை முற்றிலும் தேய்ந்துவிட, நீ இரு துண்டுகளாகிப் போவாய். மனைவியை வைத்துக் காப்பாற்றத் தெரியாத மன்னன் என்ற அவப்புகழை எனக்கு நீ பெற்றுத்தரப் போகிறாயா, பூமிஜா?...” என்பார். “எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறேன். நீங்கள் என்ன