பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வனதேவியின் மைந்தர்கள்

செய்வீர்கள்!” என்று அவள் பிடிவாதமாக அந்த உணவை ஒதுக்குவாள். உடனே கணவர் என்ற காப்பாள உறை கழன்று விழும். மன்னர் ஆணை’ என்ற கத்தி வெளிப்படும். “மன்னன். நான் மன்னன் ஆணையிடுகிறேன். காலத்துக்கும் நீ அடி பணிய வேண்டும், பூமகளே!” என்று குரலை உயர்த்துவார்.

அவள் அப்போது அந்தக் குரலை விளையாட்டாகக் கருதிக் கலகலவென்று சிரிப்பாள்.

ஆனால், சிரிக்கக்கூடிய குரல் அல்ல அது.

அவளை அனற்குழியில் இறங்கச் செய்த குரல் ஆணை அது. அதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால், இப்போது?

அவளை அவர் வெளி வாயிலுக்கு அல்லவோ அழைத்துச் செல்கிறார்? அச்சம் இனம் புரியாமல் நெஞ்சில் பரவுகிறது.

முதுகாலைப் பொழுது, மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம், வாயிற் காப்பவர்கள், பணிப்பெண்கள், ஏவலர்கள். அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேரம் குஞ்சு குழந்தைகள் முதல் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கும். அவள் வெளியே தென்பட்டால் ‘மகாராணிக்கு மங்களம்’ என்று வாழ்த்தி வணங்கும் குரல் ஒலிக்கும்...

ஆனால் சூழல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விட்டதோ?...

துடிப்பு கட்டுக்கடங்காமல் போகிறது.

அவரைக் குரலெடுத்துக் கூப்பிடவும் முடியவில்லை. அத்துணை தொலைவில் தன்னை இருத்திக் கொண்டிருக்கிறார். வரிக்கொம்பில் ஒற்றைக் காகம் ஒன்று சோகமாகக் கரைகிறது...

வாயில். வாயிலில் தேர் நிற்கிறது. அதில் பூமாலை அலங்காரங்கள் எதுவும் இல்லை. தேரை ஒட்டும் பாகனாக...