பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வனதேவியின் மைந்தர்கள்

விறுவிறுப்பான பானம் ஒன்று கொண்டு வந்து தருகிறார்கள். அவள் அதை அருந்திய பின் அந்தப் புல் படுக்கையில் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் கண்கள் சுழல, உறக்கம் வந்து விடுகிறது.

கனவுகளே இல்லாத உறக்கம் எங்கோ ஆனந்தம் தாலாட்டும் அமைதி அன்னை மடி என்பது இதுதானோ? என் அன்னை... என் தாய். என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில் எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்திரோ? தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினிரோ? அதற்காக என்னைத் துறந்தீரோ?.... தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே? மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலிபோடும், தனிமைப்படுத்தும் முட்கள். அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான். என்னை அந்த சிறையில் இருந்து மீட்டுவர தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ?...

டகடகடகடங்கென்று ஒசை அதிர்கிறது. ஒ. யாரோ அரசகுமாரர் வேட்டைக்கு வந்துள்ளார். நான்கு முழ நீளமுள்ள வேங்கைப்புலி, பெண்புலியை அம்பெய்து வீழ்த்திவிட்டார். அதற்கான வெற்றிக் கொட்டு...

யாருக்கு... யாருக்கு வெற்றி! அந்தப் புலி இரையெடுத்துக் குடும்பம் புலர்த்தும்! அது தப்பா?...

ஏய்... போதும்... போதுமப்பா! போதும்..

யாரோ சிரிக்கிறார்கள்.

பட்டென்று விழிப்பு வருகிறது. அவள் கண்களை மலர மலரக் கொட்டிக் கொண்டும், அங்கையினால் அழுத்திக்-