பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

113

அவள் முகம் இருண்டு போகிறது.

திரும்பிச் செல்கிறான்.


11

அவன் செல்வதையே அவள் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். கண்கள் அவன் வரிவடிவக் கோட்டில் தன்னுணர்வின்றி ஒன்றுகின்றன. இளையவர்.இளையவர்.

அந்நாளில் மானின் பின் அதைக் கொல்லச் சென்ற அண்ணனுக்குத்துணை போகாத இளையவன்.அண்ணன் அதைக் கொல்லுமுன், அதை அவர் அம்பிலிருந்து காப்பாற்று என்று போகச் சொன்னாள். இளையவன் மறுத்தான். இவனுக்கென்று ஒரு தனி எண்ணம் கிடையாது. அண்ணன் கொலை செய்வதை ஆதரிப்பவன். அவன் நிழல். அவள் ஆத்திரத்துடன் போ... போ... போ! ஏன் இங்கே நிற்கிறாய்? எனக்குக் காவலா? எனக்கு நீ காவலா, அல்லது சமயம் பார்த்திருக்கிறாயா என்று தீச்சொல்லை உமிழ்ந்தாள். அந்தத் தீச்சொல்லும் அவனை விரட்டவில்லை. ஒரு கோட்டைப் போட்டுவிட்டுச் சென்றான்.

‘நீ என்ன எனக்குக் கோடு போடுவது! நான் உன் அடிமையா! கானகம் என்னுடையது; என் அன்னை மடி: நான் எங்கும் திரிவேன்” என்று அந்தக் கோட்டை அழித்தாள்.

இன்று எந்தக் கோடும் இல்லை. அவன் போகிறான்.

அவன் கையில் வில்லும் அம்பும் இல்லை.

அண்ணன் அரக்கர்களை அழித்துவிட்டான். எனவே கானகம் அபாயமற்றது என்று நினைத்தானா? கானகம் அவளுடையது; ஆசைப்பட்டாள்; கொண்டு வந்து விட்டிருக்கிறான். ஆசை. கருவுற்றவள், நிறை சூலியாக இருக்கும்போது, ஆசையை நிறைவேற்ற தன்னந்தனியாக அனுப்பி வைத்திருக்கிறான்.

அவளுக்கு உடலில் சிலிர்ப்பு உண்டாகிறது.வ. மை. - 8