பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வனதேவியின் மைந்தர்கள்

கானகம். தண்டனையா? அடிமைப் பெண்களும் அறுசுவை உண்டியும், பஞ்சணை இனிமைகளும் இல்லாத கானகமும், தனிமையும் தண்டனை என்று மெய்ப்பித்திருக்கிறார்களா?

அவந்திகா! சாமளி பெட்டியைத் துக்கிக் கொண்டு மகாராணியைப் பரிசில்களுடன் அனுப்பி வைக்க வந்தீர்களே! உங்கள் மகாராணி நாடு கடத்தப்பட்டிருக்கிறாள். பேதைப் பெண்களா! உங்கள் மகாராணி இனி மகாராணி இல்லை. முழுதுமான பேதை, நீங்கள் இனி யாருக்கு ஊழியம் செய்யப் போவிர்கள்?

அவளுடைய இந்த எண்ண மின்னல்கள், மதுக்குடம் பொங்கிவரும் நுரை போன்ற சிரிப்பாய்ப் பொங்கி வருகிறது: அவள் உரக்கச் சிரிக்கிறாள். அந்தக் காட்டில் பெரிய மாளிகை போல் விழுது பரப்பி நின்ற ஆலமரத்தினடியில், அங்கு குடியிருந்த பல்வேறு உயிரினங்களின் அரவங்களும் அடங்கிவிட, இவளுடைய சிரிப்பு மட்டும் நெடுநேரம் இவளுக்கு ஒலிப்பதாக உணருகிறாள். அந்தச் சிரிப்பு அவளுக்கே அந்நியமாகப்படுகிறது. அவள் சிரிப்பை நிறுத்தியதும் அங்கிருந்த பறவைக் கூட்டங்கள் சிறகடித்து வட்டமாகப் பறக்கின்றன; தங்கள் தங்கள் மொழியில் கூச்சல் போடுகின்றன. ஆலமரப் பொந்தில் சுருண்டு கிடந்த கருநாகம் ஒன்று விருவிரென்று வெளியே வந்து, குடை விரிப்பது போல் படம் எடுத்து அவளுக்குச் சற்று எட்டிய தொலைவில் முகம் காட்டி வரவேற்பு அளிக்கிறது.

சற்று எட்ட, கூட்டமாகச் செல்லும் மானின்ம், அவள் அங்கு இருப்பதைக் கண்டுவிட்ட நிலையில் கூட்டத்தோடு நின்று பார்க்கிறது.

இப்போது அவளுக்கு இன்னும் சிரிப்பு பொங்கி வருகிறது.

“தோழிகளே, தோழர்களே, வாருங்கள். இங்கு வில் அம்பு, வாள், ஈட்டி கவண்கல் எதுவும் கிடையாது. என்னை நம்புங்கள். நான், நான் மட்டுமே இங்குள்ளேன்!”

அவள் சருகுகள் கால்களில் மிதிபடும் மெல்லோசை கேட்க, மான் கூட்டத்தின் அருகே சென்று ஒரு குட்டி மானைப் பற்றித்