பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

115

தன் மென் கரங்களால் தடவிக் கொடுக்கிறாள். அதன் கழுத்தோடு அணைந்து இதம் அநுபவிக்கிறாள். அதன் உறவுக்குழு, அவளால் ஆபத்தொன்றுமில்லை என்றுணர்ந்து அருகில் உள்ள தடாகக்கரைக்கு நகருகிறது. இவளும் தடாகக் கரைக்கு வருகிறாள். எத்தனை நீர்ப்பறவைகள்! அன்னப் பறவைகள் - சிவந்த மூக்கும் வெண்துவிகளுமாக ஒற்றைக்கால் தவமிருக்கும் கொக்கு முனிகள். கதிரவனைப் பார்த்து மலர்ந்து நேயம் அதுபவிக்கும் தாமரைகள். நீலரேகை ஒடும் செந்தாமரைகள் வட்டவட்டமான இலைகளில் முத்துக்கள் இை ழவதும் சிதறுவதுமான கோலங்கள்.வண்டினம் வந்தமர்ந்து தேன் நுகரும் ஆரவாரங்கள்.

பூமகள், அருகில் ஒடும் ஒரு மரத்து வேர்த்தண்டில் அமர்ந்து தடாகத்தில் கால்களை நனைத்துக்கொள்கிறாள். பளிங்கு போன்ற நீர். மீன்கள் அவள் பொற்பாதங்களில் மொய்த்து, பாதசேவை செய்கின்றன.

“அடி, தோழிகளா,போதுமடிசல்லாபமும் சேவையும் நான் தன்னந்தனியாக வந்திருக்கிறேன். புதுமணப்பெண் அல்ல, குறுகுறுத்து நாணுவதற்கு!” என்று கூறிக் கொண்டு கரங்களால் நீரை அள்ளி எடுத்து அவற்றை விரட்டுகிறாள். அது பெரிய தடாகம். மான்கள் எட்ட எதிர்க்கரைக்கு நகர்ந்து போகின்றன. அருகே, புதரிலிருந்து வெளிப்படும் கரடி ஒன்று, சட்டென்று நீரைக் கலக்கிக் கொண்டு மூழ்கி, எழும்புகையில் அதன் வாயில் ஒரு பெரிய மீன் சிக்கி இருக்கிறது.

இவள் கலீரென்று சிரிக்க, அது திடுக்கிட்டாற்போல் அதிர, மீன் நழுவித் தண்ணிரில் விழுகிறது.

“.... கரடி மாமி? உனக்குப் பழமில்லையா? புற்றாஞ்சோறு இல்லையா? தேனில்லையா? ஏன், பாவம், மீனைப் பிடித்து வதைக்கிறீர்கள்?’ என்று அருகில் சென்று அதன் தலையைத் தடவிக் கொடுக்கிறாள். பொச பொசவென்ற முடி நனைந் திருக்கிறது. பட்டுப்போல் மென்மையாக உணருகிறாள்.