பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வனதேவியின் மைந்தர்கள்

“ஓ! உனக்கும் மசக்கையா? அதனால்தான் மீன் பிடிக்க வந்தாயா?... எனக்கும் மசக்கை ஆசை, ஆனால் இப்போதுதான் மன்னர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.”

இவள் கைச்சுகத்தில் அந்தக் கரடி கட்டுப்பட்டாற்போல் நிற்கிறது. “உனக்கு மன்னர் இருக்கிறாரா?. இருக்கமாட்டார். இருந்திருந்தால் உன்னைக் காடு கடத்தி, நாட்டு மனிதர்களிடம் அனுப்பி வைத்திருப்பாராக இருக்கும். மாற்றான் வீடு, சிறை, அக்கினிகுண்டம், ஆண்டான், அடிமை எதுவும் இல்லாத உங்கள் உலகம் எனக்குப் பாதுகாப்பானதுதானே?.”

வெயில் ஏறுவது உறைக்காமல் குளிர்ச்சியின் பாயல் படிகிறது. இதமான ஒலிகளும், நீரும் நிழலும், ஒளியும் அவளுக்கு இதமான தாலாட்டுப்போல் சூழலோடு ஒன்ற வைத்து பேரின்பப்படிகளில் ஏற்றுகின்றன. கரடி மீண்டும் மீன் பிடிக்க நீரில் மூழ்குகிறது.

ஒர் எறுப்புச்சாரி, வாயில் வெண்மையாக எதையோ கவ்விக் கொண்டு மரத்தின் மேல் ஏறுகிறது. அவள் நிமிர்ந்து பார்க்கிறாள். இது என்ன மரம்? அரசா? இலைகள் சிறியவை: சூரிய ஒளியில் துளிர்கள் வெள்ளிக்காககள் போல் மின்னுகின்றன; நீரில் நிழல்கள் ஜாலம் செய்கின்றன. சரசரவென்று பறவைகளின் இறக்கைகள் படபடக்கும் ஒசை கேட்கிறது. மரக்கிளைகள் குலுங்குகின்றன. சிவப்பும் மஞ்சளுமாகக் கனிகள் இரைகின்றன.

ஒ.? அதுமனின் குலத்தாரோ?

அதுமன் செய்தி அனுப்பியிருப்பானோ? அந்தக் கனிகளைப் பொறுக்கி முன் மரத்தின் மேல் நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தக் குரங்கு, குட்டியை மடியில் இடுக்கிக் கொண்டு தாவித்தாவிப் போகிறது. மரத்துக்கு மரம் தாவிச் செல்கின்றன. பல குரங்குகள். அவள் காத்துக் காத்து அருகே செல்கிறாள். எந்தச் சேதியும் யாரும் அனுப்பவில்லை. குரங்கினம் அப்பால் சென்று விட்டது.