பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வனதேவியின் மைந்தர்கள்

இவள் கூறிமுடித்துக் கன்னத்தோடு பட வைக்கையில் கண்களில் இருந்து வெம்பனி உருகி வழிகிறது.

“தத்தம்மா தத்தம்மா... நீ... நீயா..? நீயா..? ஆம், உன் அடிவயிற்றில் வடு...”

என்று தடவுகிறாள். “தத்தம்மா? நீ காட்டுப்பூனைக்கு விருந்தாகிவிட்டாய் என்றார்கள். எங்கேயடி போயிருந்தாய்? ஊர்சுற்றிவிட்டு என்னைத்தேடிக் கண்டுபிடித்தாயா? தத்தம்மா?”

அதை மார்போடு அணைத்துக் கொள்கிறாள். கன்னத்து வெம்பனியில் சிறகு நனைகிறது.

“பூமிஜா, தாயே, எனக்கு உன்னைப் பார்க்க தாளவில்லை. அநியாயம் நடக்கிறது. அந்தப் பெரிய அரண்மனையில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாது. அந்த ஜலஜை, நஞ்சருந்தித் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.” ஒரு கணம் உலகத்துத் துடிப்புகளே நின்றுவிட்டாற்போன்று அவள் திகைக்கிறாள்.

“ஆம், நச்சரளி விதையருந்தி மாண்டு கிடந்தாள். நீங்கள் வனவிருந்தாடச் சென்றீர்களே அப்போது அன்று காலையில்.”

“அதனால்தான் எங்களை அவசரமாக அனுப்பி வைத்தார்களா, தத்தம்மா?”

“இருக்கும். என்னால் இப்பிறவியில் உங்களை அடைய முடியவில்லை. அடுத்த பிறவியில் உங்களை அடைவேன். என்றாளாம். இந்தப் பேச்சு அனைத்துப் பணிப்பெண்கள் வாயிலும் அரைபட்டது. அரக்கனின் நெஞ்சில் தகாத இச்சை பிறந்த குற்றம் உங்களுக்குத் தண்டனையாயிற்று. சிறையிருந்தீர்கள், எரிபுகுந்தீர்கள். சத்தியத்தை நிரூபித்தீர்கள். இப்போது அதே புள்ளி விழுந்திருக்கிறது. சத்தியத்தை யார் நிரூபிக்க வேண்டும்?”

“தத்தம்மா!”

நெஞ்சிலிருந்து வெடித்துவரும் அலறல் போல் ஒலிக்கிறது.

“தாயே உங்களுக்குக் கோபம் வரும். அந்த ஜலஜாவின் புருசன் துணி வெளுப்பவன், அவளை வெகுண்டு கடிந்தானாம்.