பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

121


நேரம் குறுகி, அந்திச் செக்கர் பரவுகிறது. பறவைகளின் ஆரவாரங்கள் அடங்க, இரவில் உலவும் இனங்கள். கா னகத்தைத் தங்கள் ஆட்சியில் கொண்டு வருகின்றன.

“தத்தம்மா, எனக்கு வனத்தில் ஒரு பயமுமில்லை. இங்கேயே இளைப்பாறுவேன். நீ ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று கோருகிறாள்.

“சொல்லுங்கள் மகாராணி, நான் உயிர் பிழைத்திருப்பது அதற்காகவே.”

“இங்கே கங்கை தாண்டி வடக்கே வந்திருக்கிறார்கள். எனக்கு வடக்கா, தெற்கா, கிழக்கா எதுவும் புரியவில்லை. வேதவதிக் கரையில் யாவாலி அம்மை ஆசிரமத்தில் ஒர் அம்மை இருக்கிறார். நந்தமுனி. நந்தபிரும்மசாரி அவரை உனக்கும் தெரிந்திருக்கலாம். நம் மாளிகைத் தோட்டத்துக்கு ஒற்றை நாண் தம்புராவை மீட்டிப் பாடிக் கொண்டு வருவார். அரண்யாணி அன்னையைப் புகழ்ந்து பாடுவார். அவரிடம் சென்று நீ என் செய்தி தெரிவிக்க வேண்டும். செய்வாயா தத்தம்மா!”

“நிச்சயமாக, நான் அவர் எப்படியும் இங்கு வரச்செய்வேன் மகாராணி - மங்களம். சுகமாக உறங்குவீர்.


12

நினைவுகள் பாலாய்க்குளிர்ந்து, பனியாய் உருகி, நெஞ்சு நிறைந்தாற் போல் புளகம் சூடுகின்றன. தெய்வீக இசையா இது? பறவைகளில் கூட்டுக் கலவையொலிகளா? பசிய மரங்களின் பெரிய பெரிய இலைகளில் நீர்த்துளிகள்.அவற்றில் கதிரொளி பட்டுச் சுடர் தெறிக்கிறது. அந்தச் சுடர் அவள் கண்களில் குளிர்ச்சியாக வருகிறது. இத்தகைய வாசக் கலவையை அவள் எங்கும், எப்போதம் நுகர்ந்ததாகப் புரியவில்லை. அரண்மனையின் கஸ்தூரி, சந்தனம், அகில் போன்ற வாசனைகளை அவள் நுகர்ந்திருக்கிறாள். அன்னத்துவிகளின் பஞ்சனையில் நறுமண மலர்களின் மென்மையான இதழ்களை அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், இங்கே, காட்சி, செவிப்புலன், நுகர்புலன்