பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

129


இவள் “சுவாமி, சுவாமி!” என்று குரல் கொடுக்கிறாள். புல்வெளிகள் கடந்து, மரங்கள், பறவைகள் மரங்களின் உயரத்தில் பறக்கும் ஒசைகள், எல்லாமே அச்சமூட்டுகின்றன.

வழியில் மரக்கிளைகளை ஒடித்து அவை உண்ணுகின்றன. பூமகளுக்கு இறங்கி விடலாம் போல் இருக்கிறது.

“அஞ்சாதே குழந்தாய், உனக்கு ஒர் அபாயமும் வராது. உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது.”

அவர் எவ்வளவு கூறியும் பூமகளுக்கு அமைதி வரவில்லை. இது என்ன விளையாட்டு மானைப் பிடித்துத் தரச் சொன்னேன். கொன்று விடக்கூடாதென்று. அதுபோல் யானைக்கன்றிடம் சிநேகம் பாராட்டியது இந்த விளைவுக்கு ஆதாரமாகி விட்டதே? விதியின் சூழ்ச்சியா?

இன்னும் என்ன விதியின் சூழ்ச்சி இருக்கிறது?

திடமாக இரு மனமே! நந்தமுனி, காப்பாளர், இந்த நேரத்தில் நேயமுடன் வந்த மாமனிதர். அவர் சொல்வதில் சத்தியம் உண்டு.

யானைகள் அந்திசாயும் நேரத்தில் ஒர் ஆற்றுக்கரைக்கு வருகின்றன. கரை முழுவதும் வரிசையாகச் செவ்வரளிப் பூக்கள்.

அந்தச் சூரியனின் ஒளியில் அந்த ஆறு பொன்னாய்த் தகதகக்க ஒர் அற்புத உலகம் அவள் கண்முன் விரிகிறது.

“இறங்கலாமம்மா! நம் இடம் வந்து விட்டோம். இதுவே வேதவதி ஆறு.”

அவள் இறங்க வசதியாக, மத்தன் குனிந்து தழைந்து, காலை மடித்து, அவள் பாதம் ஏந்துகிறான். அவள் இறங்குகிறாள்.

ஒருகணம் உலகமே சுழல்வது போல் தோன்றுகிறது. கண்களை மூடிக் கொள்கிறாள். என் இடம். வேதவதிக்கரை. என் தாய் மண். தாயே உனக்கு வணக்கம். நான் அநாதை இல்லை. உணர்ச்சிகள் கொப்புளிக்க அவள் விம்மி அழுகிறாள்.வ. மை. -9