பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வனதேவியின் மைந்தர்கள்


என்றாலும் அவர்கள் வந்ததை அறிந்த சிறுவர் பலர் பந்தம் கொளுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.

ஏதோ ஒரு தேவதையைப் பார்ப்பதுபோல், வியப்பு மலர அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். நந்தபிரும்மசாரி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது புரிகிறது. அவர்கள் அவள் முன் வணங்கி, ‘வனராணிக்கு மங்களம்’ என்று முகமன் கூறுகிறார்கள். அவர்கள் யாரும் அரைக்கச்சைக்குமேல் ஆடை அணிந்திருக்கவில்லை. பெண்களும் ஆண்களும் - சிறுவர் சிறுமியர் வேறுபாடு தெரியவில்லை. ஒரு சிறு பையன் அம்மணமாக அவளைக் கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறான். அடுத்த கணம், அவன் கையில் கவண்கல் போல் ஒர் ஆயுதம் இருப்பதை அவள் பார்த்து விடுகிறாள்.

அதற்குள் அந்தச் சிறுவனின் தாய் போன்ற அம்மை வந்து அதைப் பறித்து எங்கோ வீசுகிறாள்.

அந்தப் பெண்மணி சிரிக்கிறாள். பற்கள் கருப்பு. நெற்றி மோவாய் நெடுக பச்சைக்குத்துக் கோலம்.

ஒ, இவர்களுக்கெல்லாம் ஒன்றும் கொண்டுவராமல் வந்திருக்கிறேனே. என்று தன்னைச் சபித்துக் கொள்கிறாள்.

நிறையப் பெண்கள் அவர்கள் வழியில் எதிர்ப்பட்டு குலவை இட்டு வரவேற்புச் செய்து அழைத்துச் செல்கின்றனர்.

வளர்ப்பு நாய்கள் குரைக்கின்றன.

ஒரு வேடுவப் பெண் அவற்றை அதட்டி அமர்த்துகிறாள்.

நன்றாகத் துப்புரவு செய்யப்பட்ட பெரிய முற்றம் அரண்போல் மனமலர் சொரியும் மரங்கள்; செடி கொடிகள் புல்வேய்ந்த நீண்ட சதுரமான ஒரு கூடம் தெரிகிறது. அருகில் சிறிய இரண்டு குடில்கள். நந்தசுவாமி அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார். குனிந்து அவர் முன் சென்று அவளையும் உள்ளே வரச் செய்கிறார். ஒர் அகல் சுடர்விட்டு எரிகிறது.