பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வனதேவியின் மைந்தர்கள்

முடியில் சேர்த்து மலர்ச்சரங்களைச் சுற்றி அழகு செய்கிறாள் உருமு.

பெரியம்மை எழுந்து வந்து அவள் முகமண்டலத்தைக் கைகளால் தடவி, சில சிவந்த கனிகளைச் சுற்றி கண்ணேறு படாமல் கழிக்கிறாள்.

பெண்களும் ஆண்களும் வட்டமாக நின்று பாடல் இசைக்கிறார்கள். ஒரமாக அமர்ந்திருக்கும் முதிய ஆண்களும், பெண்களும், மடியில் குழந்தைகளை வைத்துக்கொண்டும் அந்தப் பாடலில் கலந்து கொள்கின்றனர்.

பூமகளுக்கு அப் பாடல், விழா எதுவும் புரியத்தானில்லை.

முதல் நாள் வரையிலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.

“இதெல்லாம் என்ன, பெரியம்மா?”

“முதல் சாரல், மழை வரும் போது கொண்டாடுவார்கள். இப்போது, வனதேவி வந்திருப்பதன் மகிழ்ச்சி.”

கன்னங்களில் வெம்மை படரும் நாணத்துடன் அவள் அந்த சோதிச்சுடரின் கதிர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

முதல் நாள், உணவு கொண்டிருக்கையில், “கிடுவி’ என்ற அந்த முதியவள் கனவு கண்டதை வந்து கூறினாள்.

“வன தேவிக்கு ரெண்டு புள்ள இருப்பதாகக் கனவு வந்தது. எங்க பக்கம் ஒரு புது வாழக்குலை. பூதள்ளி இருக்கு அது தங்கமா மின்னுது. நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து காட்டுறேன். குலை பிரிஞ்சி, பூ உதிர்ந்து, பிஞ்சு வந்து முகிழ்க்கும். ஆனா இது. நாதங்கமாதிரி இருக்கேன்னு கைவச்சப்ப, மடல் பிரிஞ்சி ரெண்டு பெரிய பழம் தெரியுது. அப்ப மரம் பேசுது. “கிடுவி, எடுத்து வச்சிக்க, வனதேவி குடுக்கிறேன். உங்களுக்கு.ராசாவூட்டு ஆளுங்க வந்து கொண்டு போயிடாம, பத்திரமா வச்சிக்குங்க. இந்த வனத்துக்கு மங்களம் வரும்.’னு மரம் பேசிச்சி. சரின்னு நா, வனதேவியக் கும்பிட்டு, அந்தப் பழத்துல கை வைச்சேன். என்ன அதிசயம்? ரெண்டு ரெண்டு புள்ளங்க. தங்கமா, அழகின்னா