பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

147


ஆமாம், அண்ணனை வெல்லுமுன் தம்பி விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கவில்லையா?

இந்தத் தம்பி தனக்கொரு ராச்சியம் உரித்தாக்கிக் கொள்ள, ஓர் அகர ஊரை நோக்கிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு போகிறாரோ?

அவர்களுக்கு அவள் இங்கிருப்பது தெரியுமோ? அறிவார்களோ? அந்த ஊருக்குச் செல்லும் வழி இதுதானோ?

அவள் பேசவில்லை. இந்தப் பிள்ளைகளைப் போல் அவர்களும் நச்சம்பு வைத்திருந்தால்..?

ஏன் இவளுக்குத் துடிக்கிறது? அவர்கள் தவறு செய்தால் இவளுக்கென்ன? ஏன்? இவளைக் காட்டுக்கு அனுப்பவில்லை என்றால், இவளால் அவர்கள் செய்யும் போர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் எல்லாம் குலகுரு என்ற பெயருடன் அங்கு வீற்றிருக்கும் சடாமகுடதாரிகளின் யோசனைகளாகவே இருக்கும்.

இவளால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்தோ என்னவோ, பெரியம்மா இவளுக்கு அந்த மூலிகைப் பானத்தைக் கொடுக்கச் செய்கிறாள். உறங்கிப் போகிறாள்.

விடியற்காலையில், நோவு நொம்பரம் எதுவும் இன்றி அவள் தாயாகிறாள். லூதான் மருத்துவம் செய்கிறாள். ஏதோ எண்ணெய் கொண்டுத் தடவி, எந்த ஒரு துன்பமும் தெரியாத வண்ணம் ஒரு சேயை வெளிக் கொணர்ந்தாள். அடுத்து இன்னொரு சேய். இரண்டும் வெவ்வேறு கொடியுடைய இரட்டை வேடர்குடியே திரண்டுவந்து மகிழ்ச்சிக் குலவை இடுகிறது.

கண்களைத் திறந்து சிசுக்களின் மேனி துடைத்து அவள் மார்பில் ஒரு சிசுவை வைக்கிறாள்.

பட்டு மலரின் மென்மையுடன் மூடிய சிறு கைகளுடனும் நீண்ட பாதங்களுடனும் கருகருவென்று முடியுடனும் மெல்லிய இதழ்கள் அவள் அமுதம் பருகத் துடிக்கும் போது.