ராஜம் கிருஷ்ணன்
13
‘இளையவர் ஆட்சிபுரியவில்லையா அவந்திகா? உணவு கொள்ளக்கூட வர இயலாத அளவுக்கு என்ன யோசனைகளாம்?’
பூமகள் கேட்கவில்லை.
இளையவர்... நிழல் போல் தொடரும் இளையவரும் உணவு கொள்ளவில்லையா? ஊர்மிளையைச் சந்திக்கவில்லையா? ராணி மாதாவின் மாளிகைப்பக்கம் செல்லவில்லையா?
அடுக்கடுக்காக வினாக்கள் மின்னுகின்றன. ஆனால் சொற்களாக உயிர்க்கவில்லை.
விமலை, விசயை, இருவரும் பின்னே உணவுத்தட்டுகள், கிண்ணங்கள், அமரும் பாய் ஆகியவற்றுடன் வந்து கடை பரப்புகிறார்கள். அவந்திகா, அவளைப் பரிவுடன் பற்றி, மென்மையாக கோரை கொண்டு மெத்தென்று முடையப் பெற்ற சித்திரப்பாயில் அமர்த்துகிறாள்.
பெரிய வாழையிலைகளைப் பரப்பி, அதில் உணவுப் பண்டங்களை வைக்கிறார்கள். மிளகும் உப்பும் கூட்டித் தயாரித்த நெய்யமுது; மாதுளங்காய்த்துவையல், தயிர் பிசைந்த சுவையமுது; கீரையும் பருப்பும் கூட்டிய மசியல், இனிப்புக் கூட்டிய புளிப்புப் பச்சடி...
“எனக்குப் பசியே இல்லை, தாயே!”
“மகளே? பசி இல்லை என்று இருக்கலாமா? இன்னோர் உயிரைத் தாங்கி நிற்கும் அன்னை நீங்கள். இந்த மாதுளங்காயும், புளிப்பும் இனிப்புமான பச்சடியும் ருசிக்கு ஆரோக்கியமாக இருக்கும். உண்ணுங்கள் தேவி!”
“ஏனோ தெரியவில்லை அவந்திகா, எனக்குப் பசியும் இல்லை, ருசியும் இல்லை...”
அப்போது சாமளி ஒரு பொற்கிண்ணத்தில் பானம் எடுத்துக் கொண்டு விரைந்து வருகிறாள். இவள் கேகய அரசகுமாரியான இளைய ராணி மாதாவின் அந்தப்புரப் பணிப் பெண்.
“தேவி, ராணி மாதா, இதைத் தாமே தயாரித்து, மகா ராணிக்குக் கொடுத்தனுப்பியுள்ளார்...”