பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வனதேவியின் மைந்தர்கள்

இவனுடைய நெஞ்சின் அலைகளை நாதமாக்கிய பிள்ளை சம்பூகன். அந்த சடாமகுட குல குருக்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்த குரு.

அவள் கண்கள் பசைக்கின்றன. சம்பூகன் மூலிகை கொண்டு வந்து காயத்தில் வைக்கிறான்.

மாதுலன் இசை பொழிகிறான். மறுநாளே கரும்பறவை தெம்புடன் தலைநிமிர்த்தி, சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கிறது. அந்த நாய்க்குட்டி, தத்தித் தத்தி, விளையாடுகிறது. ஒடிந்த காலும், கடிபட்ட கழுத்தும் இன்னும் முழுதுமாகத் தேறவில்லை.

லூ வருகிறாள். “வனதேவி! இந்தக் குட்டியை இங்கு யார் கொண்டு வந்தார்கள்?.”

“ஏனம்மா? சம்பூகன்தான், பாவம் கடிபட்ட இந்தக் குட்டியைக் கொண்டு வந்திருக்கிறான். நாய்தானே இது? இந்தப் பறவை பார், இது கூடப் பறக்க முயற்சி செய்கிறது. மாதுலனின் குழலோசையில் நோயும் துன்பமும் ரணமும் கூடக் குணமாகிறது. லூ!”

“அது சரி, ஆனால் இது வெறும் நாயல்ல. ஒநாய். இதற்குக் கருணை காட்டுவது சரியல்ல. இது பெரிசானா பிள்ளைகளைக் கவ்விட்டுப் போகும் ஏய்! அத்த முதல்ல கொண்டு ஆத்தோடு போட்டுட்டுவா இல்லாட்டி மூங்கிக் காட்டுக்கு அப்பால் தூக்கி ஏறி!”

பூமகளுக்கு தன் சிறுமிப்பருவத்தில் அரக்கர் வேறு உருவம் எடுத்துப் பிள்ளைகளைத் துக்கிச் சென்று தின்பார்கள் என்று கேட்ட செய்தி நினைவில் வருகிறது. அதே அறியாமை, தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தீங்கு வருமோ என்ற அச்சமாக அவள் தெளிவை மறைக்கிறது.

“ஆமாம் சம்பூகா! அதனதன் இனம் முதிர்ந்ததும் அதன் வாசனையைக் காட்டும். நாய்தான் நாம் வளர்க்கிறோம். அது நன்றி காட்டுகிறது. மந்தைகளுக்குக் காவலாக இருக்கிறது. இது அப்படியிருந்தால். இருக்குமா?"