பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

159

முதியவள் பூப்பிரிவது போன்று துயரத்தை வெளிப்படுத்தும்போது, பூமகள் வெலவெலத்துப் போகிறாள்.

சத்தியமுனி சற்றும் எதிர்பாரா வகையில் குனிந்து அவள் முதுகைத் தொட்டு,

“வருந்தாதீர் தாயே, எல்லாமே நன்மைக்குத்தான் நடக்கிறது. நீங்கள் பேறு பெற்றவர்கள். துன்பங்கள் மனங்களைப் புடம் போட்டுப் பரிசுத்தமாக்குகின்றன. அதன் முடிவில் எய்தும் மகிழ்ச்சியில் களங்கமில்லை. மனித தருமம் என்பது, எல்லா உயிர்களும் நம்மைப் போன்றவையே என்ற ஒருமைப்பாட்டில் தழைக்கக் கூடியது. மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எந்த தருமமும் எப்போதும் நிலைத்திருக்க முடியாது. மேலோட்டமாக எல்லாம் நன்மைபோல் தெரிந்தாலும் உள் மட்டத்தில் கொந்தளிப்பும் அமைதியின்மையும் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கானக சமுதாயத்தில், எல்லா உயிர்களும் நம் போல் என்ற இசைவை, இணக்கத்தைத் தோற்றுவிப்பதில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.”

அவர்களெல்லாரும் அமர, பாய்களை விரிக்கிறாள் லூயாவாலி ஆசிரமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும், பெண்களும் கொண்டு வந்த வரிசைகளை வைத்துவிட்டு, இரண்டு பிள்ளைகளையும் சூழ்ந்து கொள்கின்றனர்.

அப்போது, மாதுலனின் குழலோசை கேட்கிறது.

சம்பூகன் மூங்கில்களைத் தேர்ந்து, தீக்கங்கு கொண்டு சுட்டுத் துவாரங்களை உருவாக்குகிறான்.

ஒவ்வொன்றாக மாதுலன் ஊதிப் பார்க்கிறான்.

பூமகள் குழலூதும் இசைஞர்களைப் பார்த்திருக்கிறாள்; கேட்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழலில் இசையை நாதமாக்க ஒரு கலைப் பொருளாக்கும் அரிய செய் நுட்பத்தை இப்போதுதான் பார்க்கிறாள். நூல் பிரிசலை முறுக்கேற்றுவது; அதை ஆடையாக நெய்யும் நேர்த்தி, இயற்கை இந்த உலகில்