பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வனதேவியின் மைந்தர்கள்

சத்திய நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றன. இப் பிள்ளைகளின் இயல்புக் குணங்கள். தலைநீட்டாத வகையில், இவர்களைத் தாங்களே ஏற்க வேண்டும். தளிர்களைக் கசக்குவதும், சிற்றுயிர்களைத் துன்புறுத்துவதும், ஈனக்குரலில் மகிழ்ச்சி கொள்வதும் என்னை மிகவும் சஞ்சலப்படச் செய்கின்றன. இவர்களுக்கு அறிவுக் கண்ணோடு, மனிதக் கண்களையும் திறந்துவிட வேண்டும் சுவாமி! நந்தமுனியும் பெரியன்னையும், குலம் கோத்திரம் அறியாத என்னை, அரச மாளிகைக்கு வந்து பேணினார்கள். அந்த நியமங்களுக்குள் நான் தொலைந்து விடாமல் மீட்டார்கள். இன்றும் இந்தக் கானகமே என் தாயகம்; இவர்களே என் மக்கள் உறவினர், எல்லாம், எல்லாம். எனவே என் பிள்ளைகளையும் இப்படியே தாங்கள் காத்தருள வேண்டும்!”

என்று உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களில் பணிகிறாள்.

அவர் அவளை மெல்ல எழுப்புகிறார்.

“மகளே, கவலைப்படாதே. நந்தன் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கே அக்கரைக்கும் இக்கரைக்கும் முன்பு பகைமை இருந்தது. ஆனால் இவர்கள் சுயச்சார்பு பெற்றுவிட்டார்கள். தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டு கலந்து வாழவும் தெரிந்து கொண்டுவிட்டார்கள். மிதுனபுரிச் சாலியர், வேதபுரிச் சாலிய வணிகர், எல்லோரும் இங்கு வருகிறார்கள். இவர்களும், வனதேவியைப் பாலித்து அவள் கொடைகளை ஏற்று முரண்பாடில்லாமல் வாழ்கிறார்கள். பிறரை வருத்தாமல் இருப்பதுதான் இங்கு முதல் பாடமாக இருந்து வருகிறது. மகளே, நீ தைரியமாக இங்கு இருக்கலாம்...”

பிள்ளைகளைத் தழுவி உச்சிமோந்து, அவர்களிடம் ஆளுக்கொரு வாழைக்கனியைச் சீப்பிலிருந்து பிய்த்துக் கொடுக்கிறார்.

அப்போது, எங்கோ மந்தையில் ஏதோ ஒரு தாய்ப் பசு “அம்மா..” என்று துன்பக் குரல் கொடுக்கும் ஒலி செவிகளில் விழுகின்றது.