பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

163

பூமகள் வில்லிலிருந்து விடுபடும் அம்பு போல் முற்றம் கடந்து, புதர்களுக்குள் புகுந்து குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறாள்.

புற்றரையில் ஐந்தாறு பசுக்கள் மலங்க மலங்க நிற்கின்றன. குரல் கொடுக்கும் பசுவின் கண்களில் ஈரம் தெரிகிறது.

ஆங்காங்கு மேயும் கன்றுகள், காளைகள் அஞ்சினாற்போல் மருண்டு வருகின்றன. அப்போதுதான் அவள் பார்க்கிறாள். கன்றொன்றைக் கவர்ந்து, ஒருவன் செல்வதும், சம்பூகன் துரத்திக் கொண்டு ஒடுவதும் தெரிகிறது.

“ஓ, இப்போதுதானே முனிவர், பகையும் வன்முறையும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்?”

அப்போது, சம்பூகன், கன்றைத் திரும்பத் தூக்கிக் கொண்டு திரும்புகிறான்.

அவன் எய்த அம்பு கன்றின் மேல் தைத்து இரத்தம் பெருகுகிறது.

“சம்பூகா? யார் செய்த வேலை இது?”

“ஒன்றுமில்லை தாயே! எதிர்க்கரையில் யாரோ பெரியவர்கள் வந்திருக்கிறார்கள். சீடப்பையன் ஒருவன் இங்கு வந்து, விருந்துக்கு இதைக் கவர்ந்து செல்லத் துணிந்து அம்பெய் திருக்கிறான். அதே சாக்காகத் துக்கிச் சொன்றான். நான் நல்ல நேரமாகப் பார்த்தேன். அதே அம்பைப் பிடுங்கி எறிந்துவிட்டு, மீட்டு வருகிறேன்.”

அதன் தாயிடம் விட்டுவிட்டு அது காயத்தை நக்குவதைப் பார்க்காமல், ஓடுகிறான். மூலிகைகள் எவற்றையோ தேடிக் கசக்கி வந்து அப்புகிறான்.

சற்றைக்கெல்லாம் கன்று தாயின் மடியை முட்டிப் பால் குடிக்கிறது. பூமகளுக்கு உடலே துடிக்கிறது.