பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

167

மூலிகைகள்தாம் தெரியும். அவன் உயிர்களைப் போக்க மாட்டான். அவன் மட்டுமல்ல. நாங்கள் உயிர்களை நேசிப்பவர்கள்! உங்கள் எல்லை கடந்து, பிள்ளைகள் கன்றைக் கொண்டு செல்ல, பசுக்கூட்டத்தில் அம்பெய்தியவர் யார்?...”

சத்தியமுனியின் இந்த விவரம் அவர்களைப் பின்னும் துள்ளச் செய்கிறது. “அது எங்கள் பசு, கன்றுகள். நீங்கள்தாம் எங்கள் பசுக்களைக் கவர்ந்து செல்வது வழக்கம். அரசரிடம் தானமாகப் பெற்ற பசுக்கள் இங்கே எப்படி வந்தன?...”

“எப்படி வந்தனவா? எங்கள் பசுக்கள் வனதேவியின் கொடை! நாங்கள் பசுங்கன்றுகளை எரியில் சுட்டுத் தின்பதில்லை...” நந்தசுவாமிக்கும் முகம் சிவக்கிறது.

“பேசாதீர்கள்! நரமாமிசம் தின்னும் நீசகுலத்துக்குப் பரிந்து வரும் நீங்களும் அதே வழிதானே!. இதற்கெல்லாம் இப்படி முடிவு கட்ட முடியாது. எங்களுக்கும் தெரியும் கோசல இளவரசர் மகுடாபிஷேகம் செய்து கொண்டு இராவணனைக் கொன்று அங்கே தருமராச்சியம் செய்யச் சென்ற போது வழங்கிய பசுக்கள் எங்களிடம் உள்ளன. அதே கோசல மன்னரிடம் உங்கள் அதமச் செயல்களை, அந்தணச் சிறுவனை அம்பால் தாக்கியதைச் சொல்லி நியாயம் கேட்போம்!” என்று சூளுரைத்துவிட்டு அவர்கள் செல்கின்றனர்.

பூமிஜா இடிவிழுந்தாற்போல் நிலைகுலைந்து போகிறாள்.

தான் நின்ற இடத்தில் உள்ள இளமரத்தைப் பற்றிக் கொள்கிறாள். புதிய மாவிலைகள் அவள் முடியில் படுகின்றன.

அப்படி நடக்குமோ? தீங்கு வருமோ? இதெல்லாாம் ஏன் நேருகின்றன!

“சம்பூகா? என்னப்பா நடந்தது? நம் பிள்ளைகள் பசுக்களைக் கவர்ந்து வந்தனரா?’ என்று சத்தியர் கேட்கிறார்.

“சுவாமி, நம்மிடம் பசுக்கள் பெருகுகின்றன. ஏனென்றால் அவை கொல்லப்படாதவை என்று தாங்கள்தாமே சொல்லி