பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வனதேவியின் மைந்தர்கள்

இருக்கிறீர்கள்? அவர்களுடைய பசுக்கூட்டங்கள் பெருகுவதில்லை. இது வீணான வாதம்...” என்று நந்தமுனி விளக்குகிறார்.

சம்பூகன் முன் வந்து நடந்ததை விள்ளுகிறான். அவர்கள் அம்பெய்தார்கள். ஆறுதாண்டிப் படகில் வந்தார்கள். அம்புபட்ட கன்றைத் தூக்கிச் செல்கையில் பசு கதறியது. அவன் சென்று தைத்த அம்பை வீசி எறிந்துவிட்டு, கன்றை மீட்டு, மருந்து போட்டான்.இதுதான் நடந்தது. அவன் யாரையும் தாக்கவில்லை.

பூமகளுக்குப் புரிகிறது. அந்த அம்பு விழுந்த வேகத்தில் அந்தப் பையனின் மீது காயம் ஏற்படுத்தி இருக்கலாம். இல்லையேல் இதை ஒரு காரணமாகக் காட்ட அவர்களே காயம் செய்து கொண்டிருக்கலாமோ?...

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, பூமகளுக்கு எப்போது என்ன வருமோ என்ற அச்சம் பற்றிக் கொள்கிறது. வழக்கம் போல்தான் எல்லாம் நடக்கின்றன. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களை வேடுவப் பிள்ளைகள் புதுப்பிக்கிறார்கள். அந்த நாட்களில் பெரியன்னையுடன் பூமகள் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வாழை வனத்துக்கப்பால் சத்திய முனிவர் இருக்கும் யாவாலி ஆசிரமம் செல்கிறார்கள். அங்கே புதிதாக நீண்ட சதுரங்களாகக் கூடங்கள். புதிய கூரைவேயப்பட்டு, சாணம் மெழுகப்பட்டு பச்சென்று துலங்குகின்றன. தீ அணையாமல் இருக்க, தனியாக ஒரு குடிலில் குண்டம் இருக்கிறது. அங்கே அவள் பல பழைய பொருட்களைப் பார்க்கிறாள். அரணிகடையும் கோல்.. பழைய கல் உரல், ... எல்லாம் அவர் தாய் பயன்படுத்திய பொருட்களாம்.

அன்னையின் சமாதி மேடாக இருக்கிறது. அதைச் சுற்றிலும் துளசிவனம். அங்கு அமர்ந்து பிள்ளைகள் செங்கதிர்த்தேவனை, தீக்கதிரை, காற்றை, விண்ணை, மண்ணைப் புகழ்ந்து பாடல்களை இசைக்கிறார்கள். கூடவே இவள் பிள்ளைகளும் மழலை சிந்துகின்றன. பின்னே ஓர் அழகிய தடாகம் இருக்கிறது. அதில் நீலரேகை ஒடும் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன.

அந்தத் தடாகத்தில் இருந்து நீர் கொண்டுவரும்போது, ரீமு