பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வனதேவியின் மைந்தர்கள்

அவள் தான் நிறைசூலியாக வனத்தில் தனியாக விடப் பட்டபோது கூட இவ்வாறு நிலை குலையவில்லை.

“இருக்காது, கூடாது... கூடாது” என்று கத்தியபடியே முனிவரை நோக்கி ஓடுகிறாள்.


18

கடலலைகள் பொங்கிப் பிரளயம் வருவதுபோலும், பூங்காக்கள் தீப்பற்றி எரிவது போலும் அந்த அமைதிப் பெட்டகம் கலங்கிப் போகிறது.

“சம்பூகன் இந்த உலகத்துக்கெல்லாம் உற்றவனாயிற்றே? அவனை அம்புபோட்டுக் கொன்றவர் யாரப்பா?”

“குருசாமி, நாங்கள் வனதேவிக்கு மங்களம் சொல்லி, ஆற்றோரம் கோரை பிடுங்கிக் கொண்டிருந்தோம். அங்கே சில தானியக் கதிர்களும் இருந்தன. சம்பூகன் அவற்றைக் கொய் வதற்காகக் குனிந்தபோது விர்ரென்று கழுத்தில் அந்த அம்பு பாய்ந்து வந்து குத்தியது. உடனே வீழ்ந்துவிட்டான். அது அக்கரையில் இருந்துதான் வந்தது சாமி!...”

“அன்னிக்கு அவங்க, சபதம் வச்சிட்டுப் போகல?... அந்தக் குடுமிக்காரங்க! பிராமண குலமாம். அவங்கதான் மந்திர அம்பை ஏவி இப்படிச் செய்திருக்காங்க. நாங்க நச்சுக் கொட்டை அம்பு செய்யக்கூடாதுன்னு சொன்னிங்க. கேட்டோம். இப்ப, நம்ம பசுவை அவங்க கொண்டு போனதை மீட்டோம். அதுக்கு இப்படி அநியாயம் செய்திருப்பது நியாயமா, குருசாமி!”

பூமகள் உறைந்து போயிருக்கிறாள். அது நடந்து வெகுநாட்கள் ஆயினவே?

“இந்த பாவத்தை, அவன்தான் செய்திருப்பான்...” என்று முணுமுணுக்கிறார்கள்.

பழிபாவச் சொல்லுக்கு இடம் தந்துவிட்டீரே! ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போதும் என்பார்கள். உங்கள் சரிதையில்