பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

177

நஞ்சே பரவுவதைத் தடுக்க இயலாதவர்?.... நாளை உங்கள் மைந்தர்கள் தேன்பிளிற்றும் மழலையில், ‘எங்கள் தந்தை’ எப்படி இருப்பார், அவர் எங்கே என்று கேட்காமலிருப்பார்களா? அவர்கள் கேட்கலாகாது, என்று அஞ்சித் தானே நான் வேடப்பிள்ளைகள், அவர்கள் குரு முனிவர் என்று ஆடியும் பாடியும் அவர்கள் ‘குலத்’ தொழிலை மறக்கச் செய்கிறேன்? இது நீசத்தனம் அன்றோ? நீர் தாடகையைக் கொன்ற வரலாற்றை நான் நம்பவில்லை. எனினும் தர்மம் என்று சொல்லப்பட்ட இனிப்புப் பூச்சை ஏற்றிருந்தேன். எது தர்மம் சுவாமி! அரக்கன் பிறன் மனையாளைக் கவர்ந்தான் என்று இகழ்ந்து, அந்த நகரையே அழித்துச் சிறை மீட்டதாகச் சொல்லி உங்கள் தர்மத்துக்காக என்மீது மீண்டும் பழிசுமத்தி நாடு கடத்தினீர். இப்போது, இந்தச் சம்பூகன்.... யாருக்கும் தீங்கிழைக்காத பாலகன். அவன் உங்கள் எல்லைக்கு வந்தானா? உங்கள் உடமைகளைக் கவர்ந்தானா?....

பறந்து சென்று, சுமந்திரர் - குலகுரு - முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் மன்னன் முன் நியாயம் கேட்க வேண்டுமென்று குருதி கொந்தளிக்கிறது. இதுவரையிலும் பூமித்தாயின் மேனி அவளை உறுத்தியதில்லை. கல்லும் கரைய மென்மையாக வருடும் அடிகளை அவள் உணர்ந்திருக்கிறாள். இப்போதோ, முட்களும் கல்லும் குத்திக்கிழித்து குருதி பொசியும் பரபரப்பில் வருகிறாள். அவளே அவளுக்குப் புதியவளாகி இருக்கிறாள்.

அவளுக்கு மிகவும் பழக்கமான, நெருக்கமான, ஒன்றி அறியப்பட்ட முகங்கள்; வாசகங்கள்; வாடைகள்... எல்லாமே அந்நியமாகத் தோன்றுகின்றன. மாதுலன்... முடி வழுக்கையான அந்தப்பிள்ளை ஓய்ந்து ஓடிந்து மரத்தோடு சாய்ந்திருக்கிறான். குழல்கள் கீழே உயிர் இழந்த நிலையில் கிடக்கிறது. அவன் அன்னை பொங்கிப் பெரும் குரல் எடுத்து ஓலமிடுகிறாள்.

சம்பூகன் - பால்வடியும் வதனங்கள் - கண்களை மூடி மென்துயில் கொள்ளும் நிலையில்.... அந்த மகிழ மரத்தின் வேர்மீது இலைப்படுக்கையில் வைத்திருக்கிறார்கள். சுரிகுழல் கற்றைகள் முன் நெற்றியில் தவழ்கின்றன. சிறு மூக்கு... மென்மையான

வ. மை. - 12