பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வனதேவியின் மைந்தர்கள்

இந்த வெற்றிலை கசக்கிறது.

கானகத்தில் வெற்றிலை பாக்கு எதுவும் இல்லை. ஆனால் மிகுந்த மணமுள்ள மூலிகைகள் உண்டு, ஒருவித வாசனைப்புல். அது புத்துணர்வு தரும்.

பணிப்பெண்... நந்தினி, அருகில் எச்சிற்கலத்தை ஏந்தி நிற்கிறாள். மாநிறமுள்ள இளம் பெண். முடியை இறுகக் கோதி உச்சியில் முடிந்திருக்கிறாள். அகன்ற கண்கள், நெற்றியில் முக்கோணம் போல் பச்சைக்குத்து. செவிகளில், வெண்மையான நெட்டிக் குழைகள். மார்பகங்கள் மொட்டுப் போல் குவிந்து, கஞ்சுகத்தின் இறுக்கத்தை விள்ளுகின்றன. முன்பெல்லாம் இந்த அரண்மனைப் பணிப்பெண்கள் கஞ்சுகம் அணிய மாட்டார்களாம். மேலாடையும் கிடையாது. இதெல்லாம் இளைய ராணி மாதாவின் சீராக்க நடவடிக்கைகளாம். இதனாலேயே ஏனைய மாதாக்களுக்கு இவளைப் பிடிக்காது போலும்!

நந்தினியின் கழுத்தில் ஒரு மண் பவழ மாலை தவழ்கிறது...

அரக்கர்கோன் மாளிகையின் அடிமைப் பெண்களும் மேலாடை, கஞ்சுகம் போன்ற எதுவும் அணிந்திருக்கவில்லை. உயர்குலப் பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமைகள் உண்டு. பணிப்பெண்களாகிய அடிமைகள் கழுத்தில் ஏராளமான சங்குமாலைகளையும் அழகிய சிப்பிகளிலும் மணிகளிலும் செய்த அணி பணிகளையும் அணிந்திருப்பார்கள். கூந்தலைச் சிறு சிறு பின்னல்களாகப் பின்னி அழகு செய்து கொண்டிருப்பார்கள். இடையில் தார்பாய்ச்சாமல் முழங்கால் வரை மட்டுமே வரும் ஆடை அணிந்து, அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிய காட்சிகள் எல்லாம் இப்போதும் மனக்கண்களில் வருகின்றன.

கானகத்தில் இருக்கையில் வஞ்சமகள் ஒருத்தி அவள் நாயகனை மயக்க வந்து நடமாடியதும் உயிர்க்கிறது.

எத்துணை அழகாக இருந்தாள்? மான், மயில், புறா. எல்லா உயிர்களின் சாயல்களையும் கொண்டிருந்தாள். “முனிகுமாரா? பிறவி எடுத்ததன் பயனை இன்றே உணர்ந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீர்?” என்று அருகில் வந்து அவள் அமர்ந்ததற்கு.....