பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வனதேவியின் மைந்தர்கள்

நியாயத்தை நான் உடைக்க முயன்றேன். இது என்னை நோக்கி வந்த அம்பு மகளே...”

“ஆயுதங்களால் உடலை அழிக்கலாம். ஆனால் இந்தச் சம்பூகன் விதைத்த விதைகள், பேராற்றலாக வளரும். மேலும் மேலும் வேறு உருவங்களில் கிளைத்துச் செழித்துவரும்...”

“சுவாமி, இந்தத் தத்துவங்கள் எதுவும் எனக்கு அமைதி தரவில்லை...”

“ஆமாம் குழந்தாய், அரசரவைகளில் போக போக்கியங்களைத் துய்த்துக் கொண்டு, பேசுவதற்குத்தான் தத்துவங்கள். இதற்கப்பால் இது, அதற்குப்பால் அது, ஏகம் பிரும்மம், மற்றதெல்லாம் மாயம்’ என்று பேசுவார்கள் வாதம் செய்வார்கள்...”

உடனே பெரியன்னை, துயரம் வெடிக்க, “நிறை சூலியை வனத்துக்கு அனுப்புவார்கள். என்ன தத்துவம் வேண்டிக் கிடக்கிறது?... மகளே, அதை மறந்துவிடு. அவர்களுக்கு அச்சம். ஏனெனில் மனசில் ஆசை என்ற கருப்பு இருக்கிறது. ஆசை சாம்ராச்சிய ஆசை ஆதிக்க ஆசை. ஆசை இல்லை என்றால் அச்சம் இல்லை. நந்தனைப் பார்; அபூர்வமான பிள்ளை; இந்தச் சம்பூகன் அப்படி வளர்ந்தான். இவர்களை அழிக்க வேண்டும் என்று குலகுரு, மந்திரம் சொல்வார் மன்னன் மதிப்பில்லாமல் கேட்பான்! “தாழ்ந்த குலப்பிள்ளைகள் மந்திரம் சொல்வதா? அந்தி தொழுவதா? சந்தி வந்தனம் செய்வதா?... இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்து, அதைத் தொலைக்க, தவ வாழ்வு வாழ்கிறார்கள். அந்தப் பாவங்கள் நம் குலத்தைத் தொத்திக் கொள்ளும் மன்னவா! நீ இந்த மந்திரம் செபித்து அஸ்திரம் எய்து, அவனை அழி; பிரும்ம குலத்தைக் காப்பாற்று!” என்று ஓதியிருப்பான்!” பூமகள் அந்த அன்னையின் சுடுசொற்களின் வீரியம் தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“எந்தையே, எது தருமம்? எது பாவம், எது புண்ணியம்? எனக்கு எதுவுமே புரியவில்லை. ஒருகால் இந்த மைந்தர்களை அவர்களிடம் கொண்டு செல்லவோ இந்த சூழ்ச்சிகள்”