பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

181

“குழம்பாதே, மகளே, நீ உறுதியாக இரு சத்தியம் என்றுமே பொய்த்ததில்லை. அது கருக்கிருட்டில் மின்னலைப் போல் தன்னை விளக்கிக் காட்டும்!”

அழுது கொண்டே பிள்ளைகளும் நந்தமுனியும் சம்பூகனுக்கு இறுதிக்கடன் செய்கிறார்கள். வேதவதி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வந்து அவனை நீராட்டி, புதிய நார் ஆடையை அரைக் கச்சையாக்கி, அந்த மகிழ மரத்தடியிலேயே அவனை வைக்கக் குழிதோண்டுகிறார்கள். அந்த இடம் அவனுக்கு விருப்பமான இடம். அங்கே அமர்ந்துதான் குழலிசைப்பான். குழல்களில் துவாரம் செய்து ஊதிப்பார்பான். அங்கே அமர்ந்து தான் வாழைநார் தூய்மை செய்து, நூல் நூற்று சுற்றி வைப்பான்.

வானவனும் இந்தப் பிள்ளைக்கு அஞ்சலி செய்வது போல் அந்தியின் துகில் கொண்டு போர்த்துகிறான். பசுந்துளிர்களையும் மலர்களையும் கொய்து அவன் உடலை மூடுகிறார்கள். அகழ்ந்த குழியில் அவனை இறக்கியபிறகு அனைவரும் கதறியழுது, மேல் மண்ணைத் துவுகிறார்கள் சத்திய முனி தாய் மண்ணைப் புகழ்ந்து பாடுகிறார்.


          “உயிர் கொடுத்த அன்னையே,
          உனைப் போற்றுகிறோம்.
          உயிர் தந்தனை, உண்டி தந்தனை,
          மனம் தந்தனை; அறிவு தந்தனை
          ஒளி ஈந்தனை, உறவு கொண்டனை
          அன்பு தந்தனை; இன்பம் தந்தனை
          இன்னல் தீர்த்தனை, வாழச் செய்தனை
          இதோ உன் மைந்தன், ஈரேழு வளர்ந்த பாலகன்.
          உன் மடியில் இடுகிறோம்; அவன் துயிலட்டும்.
          உறுத்தாமல், வருத்தாமல் துகில் கொண்டணைப்பாய்.
          தாயே, தயாபதி, உனைப் போற்றுகிறோம்...”

சங்கம் கொண்டு ஊதுகிறார்கள். சிறுவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.