பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

183

முடியை உச்சியில் முடிந்து கொண்டு, அரைக் கச்சையுடன் கனிகளை சேகரித்தும், தானியங்கள் விளைவிக்கும் பூமியில் பணி செய்தும், ஆடியும் பாடியும் திரிந்தாலும், இவர்கள் தோற்றம் தனியாகவே தெரிகிறது. மொட்டை மாதுலனும் இவர்களுடன் திரிகிறான். அவனுக்குச் சிறிது கண்பார்வையும் கூடியிருக்கிறது. அவர்கள் காலை வந்தனம் பாடும்போது, பூமகள், இவர்களுக்கான காலை உணவைச் சித்தமாக்குகிறாள்.

இளவேனில் மரங்கள் செடிகளிலெல்லாம் புதிய தளிர்களையும் அரும்புகளையும் சூடித் திகழ்கிறது. பனிக்குளிர் கரைந்து மனோகரமான காலை மலர்ந்து விண்ணவன் புகழ்பாடுகிறது.

தானிய மாவில் கூழ் செய்து, பிள்ளைகளுக்கெல்லாம் அவள் இலைக் கிண்ணங்களில் வளர்க்கிறாள். கிழங்குகளைச் சுட்டு வைத்திருக்கிறாள்.

“இன்று குருசுவாமி, எங்களை வேம்பு வனத்துக்கு அழைத்திருக்கிறார். அங்கு ஒரு பொறி சுழலும். அதைக் கண்ணால் பார்க்காமல் சுழலும் ஓசையைக் கேட்டவாறே அம்பெய்து வீழ்த்த வேண்டும். அசையும்போது குறிபார்க்க வேண்டும்....”

அஜயன் இதைக் கூறும்போது பூமகள் திடுக்கிடுகிறாள்.

“முனிவர் - உங்கள் குரு, அப்படியா பயிற்சி கொடுக்கிறார்?”

“ஆமாம்? யந்திரம் - காற்றசையும் போது சுழலும். அப்போது அதில் பொருத்தப்பட்ட பறை அதிரும். அந்த ஓசை எங்கிருந்து வருகிறதோ அதை மனதில் கொண்டு எய்வோம். நேற்று, பறவை பறப்பது போல் ஒரு பஞ்சுப் பிரதிமை செய்து மரங்களிடையே வைத்து அசைத்து, எப்படிக் குறிபார்க்க வேண்டும் என்று கற்பித்தார். அம்மா, அஜயன் குறி விழவில்லை. நான் தான் வீழ்த்தினேன்!” என்று விஜயன் பெருமை பூரிக்க பேசுகிறான்.

“குழந்தைகளே, நீங்கள் வில் வித்தை பயிலுங்கள். ஆனால் இந்த மாதிரியான விளையாட்டுக்கள் வேண்டாம்! ஓசை வந்த