பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வனதேவியின் மைந்தர்கள்

பக்கம் எய்வது தவறான செயல்... அத்துடன் இந்த வில்வித்தை யாரையும் அழிப்பதற்குப் பயன்படாது. வெறும் தற்காப்பு வித்தைதான். இயற்கை அம்மை இதற்காக நம்மைப் படைக்க வில்லை. இயற்கையின் எந்தப் படைப்பையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் குருசாமி இப்படிச் சொல்லித்தானே உங்களுக்கு வித்தை பயிற்றுகிறார்...?”

“ஆமாம், அவர் சொல்லாமல் நாங்கள் ஆயுதங்களைத் தொடவே கூடாது என்று சொல்லி இருக்கிறார்...”

“அதை நீங்கள் உறுதியாகக் காக்க வேண்டும். இந்த உறுதியினால், தீங்கு விளைவிக்க வரும் எதிரியோ, பகைவரோ கூட அம்பைக் கீழே போட்டுவிடுவார். போரும் அழிவும், இருவரும் மோதுவதாலேயே நேரிடுகிறது. நெருப்புப் பிடிக்கும்போது, காற்று வீசினால் அது பல இடங்களுக்குப் பரவும். அழிவு நிகழும். ஆனால் அந்தத் தீயை நீரினால் அணைத்துவிடலாம். பிள்ளைகளே, எக்காரணம் கொண்டும் நீங்கள் அழிவு நிகழக் காரணமாக இருக்கலாகாது... நந்தசுவாமி மதயானையைக்கூட சாந்தமாக்கும் தன்மை படைத்திருக்கிறார். நாம் காட்டில் எப்படி வாழ்கிறோம். அந்த விலங்குகளும் நாமும் ஒருவருக்கொருவர் அச்சமில்லாமல் இருப்பதால்தான்...” தன் இதயத்தையே வெளிக்காட்டும்படி அவள் மைந்தருக்கு உரைக்கிறாள்.

“இப்போது சொல்லுங்கள்.... குருசுவாமி தாமே உங்களுக்கு இந்த விளையாட்டு வித்தை பயிற்றுகிறாரா?”

விஜயனின் பார்வை தாழ்ந்து நோக்குகிறது.

“வனதேவி, இந்த மாதிரி ஓசையைக் கேட்டே அம்பெய்த முடியும் என்று அஜயன் சொன்னதால் குருசுவாமி இதைச் செய்து பார்க்கலாம் என்றார். அந்தப் பொறி போல் செய்யவும் விஜயனுக்கும் அவனுக்கும் அவர் கற்பித்தார். அந்தப் பொறி மெல்லிய நாராலான பொம்மை. அதை இன்று சரியாக அவர் அமைத்திருப்பார். அதுதான் ஒரே ஆவல்...” நீலன் உடல் பரபரக்க, கண்கள் இடுங்க மகிழ்ச்சியுடன் புதுமையை அனுபவிக்கிறான்.