பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

185

“நாங்கள் மிதுனபுரிச் சந்தைக்குப் போனபோது அங்கு இப்படி ஒன்று வேடிக்கையாக வைத்திருந்தார்கள். அம்மா, அப்போது அங்கு தமனகன் என்ற காவலாளி இதைப் பற்றிச் சொன்னான். அங்கே படைவீரர்களுக்கு அதை நிறுத்தி வைத்து, வில் அம்புப் பயிற்சி சொல்வார்களாம். அப்போது, இந்த மாதிரி ஒரு பொறி பற்றியும் சொன்னான். முனிவரிடம் விஜயன் கேட்டான். அவர் அதைச் செய்து வித்தையும் கற்கலாம், வேம்பு வனத்துக்கு வாருங்கள் என்றார்.”

பிள்ளைகள் விடைபெற்றுச் செல்கின்றனர்.

பூமகள் கவலையிலாழ்கிறாள்.

பிள்ளைகள் குமரப்பருவம் உடையும் வேகத்தில் இருக்கிறார்கள்.

“கண்ணம்மா, ஷூத்திரிய வித்து!” என்று பெரியன்னை பேச்சுக்குப் பேச்சு நினைவூட்டுவது செவிகளில் ஒலிக்கிறது.

வானவன் வெண் கொற்றக் குடை பிடித்து உச்சிக்கு ஏறும் நேரம். பூமகள் பிள்ளைகள் உண்டபின் கலங்களைச் சுத்தம் செய்யவும் மனமில்லாமல் நிற்கிறாள்.

லூ, உருமு, சோமா ஆகியோர் சில கொட்டைகளைக் கூடைகளில் சேகரித்துக் கொண்டு வருகிறார்கள். கிடுவிக் கிழவி மண்ணில் மடிந்துவிட்டாள். உருமுவுக்கு இப்போது ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். லூவின் பிள்ளைக்கே இரண்டு சந்ததியை அவள் தந்திருக்கிறாள். சோமாவின் மகள் சென்ற திங்களில் குமரியானாள். இவ்வாறு கொட்டைகளைக் கொண்டு வந்து உடைப்பார்கள். அவற்றில் விதைப்பருப்பு உண்ணவும் நன்றாக இருக்கும். மீதமானவற்றை மிதுனபுரி வணிகரிடம் கொடுத்து, மாற்றாக வேண்டும் பொருட்களைப் பெற்று வருகிறார்கள். தோல், மிக முக்கியமான வாணிபப் பொருள்.

“பெரியம்மா, இன்றைக்குப் பெரிய மீன் கொண்டு வந்தாங்க, ரெய்கி புட்டு அவிச்சி எடுத்து வரும். பிள்ளைகள் அந்திக்கு வரும்போது, இன்றைக்கு விருந்தாடலாம். நல்ல நிலா இருக்கும்.”