பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

வனதேவியின் மைந்தர்கள்

“அடியே, நல்ல நிலான்னு சொல்லி ஊரியும், பாமுவும் மிதுனபுரிக் கரும்புச் சரக்கைக் குடத்தில் கொண்டு வந்து வார்க்கக்கூடாது! அதெல்லாம் உங்கள் குடிகளில் வைத்துக் கொள்ளுங்கள்! பிள்ளைகள் மனம், அறிவு திரிய நீங்கள் எல்லாவற்றையும் ஊற்றிவிடுவீர்கள்! ஏதோ பதினாறு ஆனால் அவர்களே தீர்மானிப்பார்கள். சத்தியரோ, நந்தமுனியோ அதெல்லாம் பாவிப்பதில்லை. அறிவு மயங்கக்கூடாது!”

கொட்டை உடைக்கும் ஒசையும், அவர்கள் கைகளில் போட்டிருக்கும் மணிகள் சேர்த்த வளையல்கள் செய்யும் ஒசையும் மட்டுமே கேட்கின்றன.

காத்யாயனிப் பசு, மூன்று ஈற்றுகள் பெற்றெடுத்து, பாட்டியாகிவிட்டது. அதைப் பிற பசுக்களுடன் ஒட்டிவிட்ட போது, அது குட்டையில் கால் தடுக்கி சரிந்துவிட்டது. அதனால் அதற்கு ஒரு கால் சிறிது ஊனமாகி இருக்கிறது. அதற்கு மூலிகை வைத்தியம் செய்து, புல்லும் நீரும் வைக்கிறாள். மர நிழலில் அது படுத்து அசை போடுகிறது.

சரசரவென்று குளம்படிகளின் ஒசை கேட்கிறது. பொதி சுமந்த கழுதைகள் பாதையில் தெரிகின்றன. வேதபுரிச்சாலியர், பட்டுக்கூடு சேகரித்துக் கொண்டு செல்கிறார்கள் போலும்?. வேதபுரிச் சாலியர். அறிமுகமான சச்சலர்.

‘வனதேவிக்கு மங்களம் பெரியம்மா இருக்கிறாரா?.” வேதபுரி என்று சொல்லைக் கேட்டதும் உடல் புல்லரிக்கிறது. முன்பெல்லாம் பருவந்தோறும் வருவார்கள். இப்போதெல்லாம் பட்டுக்கூடுகளை, இந்த வேடர்களே சேகரித்து மிதுனபுரிச் சந்தைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

“வேதபுரியில் மன்னர் நலமா?”

“ஆம், வனதேவி, மன்னர் நலம்.”

தாடி, மீசை, முடி நரைத்த கச்சலர், அவள் இங்கு வந்த நாட்களாக வருபவர்தாம். பெரியன்னை.அவரை ஒரிரு நாட்கள் தங்க வைத்து விடுவார். மற்றவர் கூடுகள் சேகரித்து வருவார்கள்.