பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வனதேவியின் மைந்தர்கள்

அவள் ஆவல் ஊறிய விதையில் எழும்பும் முளைபோல் நிமிர்ந்து கொள்கிறது.

குருகுல வாசம். எல்லோருக்கும் பிள்ளைகள்.

“என் பிள்ளைகளும் குருகுலவாசம் செய்கிறார்கள். நாடு பிடிப்பதற்கல்ல.” ஒரக்கண்ணால் அவர்கள் பக்கம் பார்த்தவாறு, பூமகள், வேடுவப் பெண்களுடன் கொட்டை உடைக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.

“இந்தப் பருப்பை அரைத்துக் கூழாக்கி, உண்டால் பசி தெரியுதே இல்ல. இந்தத் தடவை, அருவிக்குபின்ன தொலைதுாரம் போயிப் பார்த்தால் குரங்கு கடிச்சிப் போட்ட கொட்டை நிறையக் கிடந்தது. எல்லாம் வாரிக்கட்டிட்டு வந்திருக்காளுவ. அதான் இங்க எடுத்திட்டு வந்தோம். வனதேவிக்கு காட்டுக்கறி, பன்னி, மானு, எதுவும்தான் ஆகாது. கொண்டைக்கோழி மயில், குயில் இதெல்லாம் இப்பப் பிள்ளைகள் பாத்து ஆடுறாங்க, பாடுறாங்க, ரசிக்கிறாங்க. முன்ன திருவி எறிந்திட்டு, சுட்டுத் தின்னுவம். ஒருக்க, மிதுனபுரி ஆளு, உப்புக் கொண்டாந்தான். அதைப் போட்டு சாப்பிட்டா ருசின்னு சொல்றாங்க. அதென்ன ருசி? கடல்ல மீனு ருசியாம். அதெல்லம் நமுக்கு எதுக்கு? இங்கே தலைமுறை தலைமுறையா பசி போக சாப்புடல? உசிர் வாழல? புள்ள பெறல? கிழங்கு புளிக்க வச்சி குடிக்கிறதுதா. ஆனா, இப்பதா புதுசு புதுசா, ருசி.”

லூவுக்கு நா எதையேனும் பேசித் தீர்க்க வேண்டும். சில சமயங்களில் அது இதமாக இருக்காது. இப்போது இந்தப் பேச்சு, மனதை இலேசாகச் செய்கிறது.

கச்சலன் எழுந்து செல்லுமுன் அவளைப் பார்க்க வருகிறான்.

“வனதேவிக்கு மங்களம். பிள்ளைகள் எங்கே தேவி?”

அவள் இமைகளை உயர்த்தாமலே, “குருகுல வாசம் செய்பவர்கள் இங்கே இருப்பார்களா?” என்று வினவுகிறாள்.

“. ஒ. ஆம்” கச்சலன் மன்னிப்புக் கேட்கிறான்.