பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வனதேவியின் மைந்தர்கள்

நானும் ஒரு பிள்ளையை இக்கானகத்தில் வளர்த்தேன் என்ற பேச்சு வாயில் இருந்து வந்திருக்கிறது. அது குறும்புகள் செய்யாதாம். தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்குமாம்.

அந்தப் பிள்ளை எங்கே? அதன் தந்தை யார்?

அடிமைப் பெண்ணுக்குப் பிள்ளையேது, பெண்ணேது? உறவே கிடையாது என்ற சொல் ஒரு நாள் பொதுக்கொன்று நழுவி வந்தது.

மன்னர் மரபுகளைக் கடித்துத்துப்பும் வெறுப்பு இவளிடம் வெளிப்படுகிறது. ஆனாலும் இவள் வேதபுரிக்காரி. வேதபுரி அரண்மனையில் சேடிபோல் இருந்தவளோ? ஜலஜாவைப் போல் பேரழகியாக இருந்திருப்பாள். யாரோ ஒரு பிரபு இளைஞன் இவளைக் கருவுறச் செய்தானோ? அல்லது.

கரீரென்று ஒர் உண்மை மின்னல் போல் சுடுகிறது.

இவள் அந்தப்புரக் கிளிகளில் ஒருத்தியோ? முறையற்ற சந்ததி உருவாகிறது என்று வனத்திற்கு அனுப்பி இருப்பார்களோ? அவன் படைவீரர்களில் ஒருவனாகி எந்தப் போரிலேனும் இறந்திருப்பானோ?. ஒருகால். ஒரு கால். இவள் அவன் சந்ததியோ?. இவள் அன்னை ஒர் அடிமைப் பெண்ணோ?. மின்னல்களாய் மண்டைக் கனக்கிறது. சத்திய முனிவரின் ஆசிரமத்தில் மகவைப் பெற்று இறந்தாளோ? மன்னர் அரண்மனைக்கு இவளைக் கொண்டு சேர்க்கச் சூழ்ச்சி செய்திருப்பாளோ இந்த அன்னை?

மேக மூட்டங்கள் பளிச்பளிச் சென்று விலகுவனபோல் இருக்கிறது.

“பெரியம்மா...’ என்ற குரல் தழுதழுக்கிறது.

“சிறிது கூழருந்துங்கள் தாயே!”

உட்கார்ந்து அவள் கையைப் பற்றுகையில் பூமகளின் விழிகள் நனைகின்றன.