பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வனதேவியின் மைந்தர்கள்

இல்லை.நம்மைப் போன்று அறிவு பெற்ற மனிதர், தங்கள், சினம், பேராசை ஆகிய தீக்குணங்கள் மேலிட, மற்றவரை அழிக்க அத்தகைய வித்தையைப் பயன்படுத்தி நிரபராதிகளை அழிக்க முன்வரும்போது, நாம் அவற்றைப் பயன் படுத்தி, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அதுவும் நம் குருநாதர், அனுமதிக்கும் போது தான்.”

“சரி, ஒத்துக் கொள்கிறேன் - நமக்குள் இப்போது சண்டை எதற்கு?” என்று விஜயன் இறங்கி வருகையில் பூமகள் குடில் மறைவில் இருந்து வெளிப்பட்டு வருகிறாள்.

“அம்மா, நமக்கு விரோதிகள் இருக்கின்றனரா?..”

விஜயனின் வினாவில் ஒரு கணம் அவள் தடுமாறிப் போகிறாள். -

ஆனால் அஜயனே இதற்கு மறுமொழி கூறுகிறான்.

“எல்லோருக்கும் இதம் நினைக்கும் அம்மா இருக்கையில் எங்கிருந்து விரோதிகள் வருவார்கள்?. இல்லையா அம்மா?”

“அக்கரையில் இருக்கும் குருகுலத்து அந்தணப்பிள்ளைகள் சிலர் நாங்கள் விளை நிலங்களில் ஏர்பிடிக்கையில், ஏளனமாகச் சிரித்தார்கள். நாங்கள் அந்தண குலத்துக்கும் கூடித்திரிய குலத்துக்கும் பொருந்தாத நீசர்களாம். அப்படி என்றால் என்ன அம்மா? விஜயனின் இந்த வினாவுக்கும் அவள் மவுனமாக இருக்கிறாள்.

“அம்மா! நாங்கள் எல்லோரும் உணவு சேகரிக்கிறோம். தாங்கள் அதை எல்லாம் நாம் சுவையாக உண்ணும்படி பக்குவம் செய்து தருகிறீர்கள். வேள்வித் தீயில் இட்டு, அதன் விளைவான மிச்சத்தை உண்பது தான் அந்தண் தருமமாம். நாம் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லாதவராம்!”

அவள் முகத்தில் சூடேறுகிறது.

“குழந்தைகளே, அவர்கள் சொல்லும் வேள்வி, கொல்லும் செயல். சத்திய முனிவரும், நத்த சுவாமியும் மேற்கொண்டு