பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வனதேவியின் மைந்தர்கள்

“மாதுலனுமா?” என்று விழியைச் சரித்துக் கொண்டு பார்க்கிறார். அவள் உடல் அந்த வெயிலிலும் குளிரில் போல் நடுங்குவது தெரிகிறது.

“ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தாயே! அம்மம்மா... இப்போது, குளத்தில் நீராடினர்களா?”

“நான் தனியாக இல்லையடி பெண்ணே, புல்லி இருந்தாள். உடலெல்லாம் புழுதியாக இருந்தது. அழுக்குப் போக நீராடினேன். நீர் பட்டதும் இதமாக இருந்தது.”

பூமகள் விரைந்து உள்ளே சென்று, உலர்ந்ததோர் ஆடையைக்கொண்டு வருகிறாள். அவளை மெல்ல அழைத்துச் சென்று, ஆடையை மாற்றச் சொல்கிறாள். பிறகு ஈர ஆடையைப் பிழிந்து, ஒரத்து மரக் கிளையில் போடுகிறாள்.

“கண்ணம்மா, பிள்ளைகளை எங்கும் போகச் சொல்லாதே! நம் கண்முன்னே இருக்கட்டும்.

“நீங்கள் அஞ்ச வேண்டாம் பெரியம்மா. அவர்கள் குழந்தைகள் இல்லை, யாரும் தூக்கிச் செல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது நான் ஊமையாகிறேன்.”

முதியவர் நிமிர்ந்து பார்க்கின்றார். கனிந்த பழத்தின் விதைகள் போல் முதிர்ந்த விழிகள் ஒளிருகின்றன. என்ன பேசிக்

கொள்கிறார்கள்?

“அந்தணகுலம், கூத்திரிய குலம் என்பதெல்லாம் எப்படி என்று பேசிக் கொண்டார்கள். சத்திய முனிவருக்கும் நந்த சுவாமிக்கும் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லை என்று அக்கரை குருகுலக் கொழுந்துகள் சொன்னார்களாம். என்னிடம் கேட்டார்கள்.”

“ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்கச் சொல்லி வைத்தார்களா?.”