பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வனதேவியின் மைந்தர்கள்

இடம். அந்த வனதேவிதான் இவர்கள் என்று எங்கள் குடியில் எல்லோரும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் வன தேவியின் பிள்ளைகள். அவர்கள் இங்கு வந்தால் நம்மை மகிழ்ச்சியாக இருக்கவிடமாட்டார்கள்!”

“அதெப்படி, குதிரையை விரட்டிவிட்டு ஒன்றுமறியாத நம் இடத்தை ராசா பறிப்பது?.”

“மந்திரம் போட்டிருக்கிறார்கள் சடா முடிமுனிவர்கள். மந்திர சக்தியில் நெருப்பு எரியும்; வெள்ளம் வரும்; காற்று அடிக்கும்.”

“..முன்னே சம்பூகன் இறந்தது நினைவிருக்கா?” என்று பூவன் கேட்கிறான்.

சம்பூகன் பெயர் கேட்டதுமே அவள் நடுநடுங்கிப் போகிறாள்.

“அம்மா நாம் எல்லோரும் அங்கே போய்ப் பார்க்கிறோம்! பூவன், காட்டுகிறாயா?” விஜயனுக்குத்தான் துருதுருப்பு

நந்தமுனி ஒற்றை யாழின் சுருதி இல்லாமலே வருகிறார்.அது மவுனமாகத் தொங்குகிறது.

பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

“குருசுவாமி, யாகக்குதிரை வந்திருக்கிறது! நாங்கள் போய்ப் பார்க்க வேண்டும்!”

“பார்க்கலாமே? அதைச்சுற்றி நின்று கொண்டு பாட்டுப் பாடுவோம். அது வந்த வழியே போகிறதா என்று பார்ப்போம்!”

இது நல்ல முடிவாக அவளுக்குத் தோன்றுகிறது.

பிள்ளைகள் கூறிய இடத்தைக் குறிப்பாக நோக்கி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு பரிசயமான தாவரங்கள்; பறவைகள்; சிறு விலங்குகள், நீர் நிலைகள்.

வேம்பு வனத்தில் புதிய சாணம் இருக்கிறது.