பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

205

“ஓ! இங்குதான் அது வந்திருக்கிறது! இது அதன் சாணம் தான்!” என்று அதன் மேலேறிக் குதிக்கிறான் மாயன்.

“இது குதிரை போட்டதல்ல. காட்டெருமையின் கழிவு.”

“இல்லை. இது போன்ற சாணம் இதுவரையிலும் இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லை.” என்று உடன் வந்த இளம் பெண் கும்பி கூறுகிறாள்.

புற்றரை பசுமையாக ஆற்றுக்கரை வரை விரிந்து கிடக்கிறது.

ஆனால் அங்கு எந்தக் குதிரையும் மேயவில்லை. இவர்கள் ஆற்றுக்கரையின் ஒரம் அடர்ந்த கோரைப்புற்கள், புதர்கள் இடையிலெல்லாம் குதிரைக்காகத் தேடுகிறார்கள். அது தென்படவில்லை. காட்டுப்பன்றிகள், எருமைகள், மான்கள் கூடத் தென்படுகின்றன. தேடி வந்த குதிரை இல்லை.

“நான் அந்தக் குதிரையைப் பிடித்து அதன் முதுகில் ஏறிச்சவாரி செய்ய ஆசைப்பட்டேன்.”

“அது பின்னங்காலால் உதைக்க முடியாதபடி நாங்கள் பிடித்துக் கொள்வோம்!

“இந்தக் காட்டில் எத்தனையோ மிருகங்கள் இருக்கின்றன. குதிரைகள். அதுவும் வெள்ளைக் குதிரைகள் தென்படவே இல்லையே?.”

“முன்பே வந்து ராசாவின் ஆட்கள் வலை வைத்துப் பிடித்துப் போயிருப்பார்கள்!”

“அந்த வெள்ளைக்குதிரை, சூரிய ராசாவின் தேரில் பூட்டிய குதிரைபோல் இருந்தது:”

ஆற்றோரமாகவே அவர்கள் நடந்து வருகிறார்கள். மாதுலன் குழலிசைக்க, நந்தமுனி ஒன்றை நாணை மீட்ட அவர்கள் குதிரையை வரவேற்கச் செல்வது போல் நடப்பதாக அவளுக்குப்படுகிறது.