பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வனதேவியின் மைந்தர்கள்

இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரை பொன்மின்ன, பின் கால்களால் பூமியை சீய்க்கிறது.

“குளம்புக்குப் பூண் கட்டியிருக்கிறார்களா?” விஜயன் கேட்கிறான்.

“அறியேன், குழந்தாய்... நீ அருகில் போகாதே!”

“இதை நமக்கே வைத்துக் கொண்டால் என்ன?... இப்போது கூட இதன் முதுகில் நான் தாவி ஏறி அமர்ந்து விடுவேன்...”

அவன் இளமுகத்தில் ஆவல் மின்னுகிறது.

“குழந்தைகளே, இது யாகக் குதிரை. இதை ஏவியவர்கள் எங்கேனும் மறைந்து இருப்பார்கள்.அவர்களால் நமக்கு வீணான சங்கடம் உண்டாகும். இதை மெள்ள அப்பால் துரத்தி விடுவோம். நீங்கள்... ஒரு கூடையில் தானியமோ, புல்லோ காட்டுங்கள். அது அந்தப் பக்கம் நகரும்....” என்று அப்போது மெல்ல பெரியன்னை வருகிறாள்.

“நீங்கள் எல்லோரும் எதற்கு இப்படி அதைச் சூழ்ந்து ஆரவாரம் செய்கிறீர்கள்? இருந்து விட்டுப் போகட்டும்! கண்ணம்மா, பொழுது சாய்ந்து அந்தி வேளையாகிறது அவரவர் வீண் விவாதம் செய்யாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்! அந்தி வந்தனம் செய்து விட்டு, இருப்பதை உண்டு, உறங்குமுன் உட்கார்ந்து யோசனை செய்யுங்கள்... போங்கள்!”

அவள் குரலுக்கு அனைவரும் கட்டுப்பட்டாலும், அஜயன் மட்டும் அன்னையின் காதோடு, “அதற்கு அடைக்கலம் என்று பெரியன்னை ஏன் சொன்னார்? அதை யார் கொல்ல வந்தார்கள்?” என்று வினவுகிறான்.

“மேதாவி அண்ணா , மிதுனபுரிக்காரரின் கோபத்துக்குத் தப்பி இங்கே வந்திருக்கிறது! புரிகிறதா? இதை எந்த தேசத்து மன்னர் ஏவிவிட்டிருந்தாலும், அவர்கள் எவ்வளவு பராக்கிரம சாலிகளானாலும், மிதுன புரி எப்போதும் தலை வணங்காது. அவர்கள் சுதந்தரமானவர்கள்; நண்பருக்கு நண்பர்கள்!”

விஜயன் இவ்வாறு கூறுவது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.