பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வனதேவியின் மைந்தர்கள்

“என்ன தருமமோ? இந்தப் பிள்ளைகள், விவரம் புரியாத முரட்டுத் தனத்துடன் விளையாடப் புறப்பட்டாற்போல் குதிரையுடன் போகிறார்கள். அச்சமாக இருக்கிறது சுவாமி! விஜயன் அந்தக் குதிரை மீது ஏறிக் கொண்டு உலகை வலம் வருகிறேன் என்கிறான். அஜயன் அதை ஒரு தும்பு கொண்டு மரத்தில் கட்டு, யாரும் கொண்டு போகக் கூடாது என்று பாதுகாக்கிறான். நம்பிள்ளைகள் கபடற்றவர்கள். விருப்பம் போல் கானக முழுவதும் திரிவார்கள். மிதுனபுரியோடும் நமக்குப் பகை எதுவும் இல்லை. சம்பூகனுக்குப் பிறகு இத்தனை நாட்களில் நமக்கு அந்த கோத்திரக்காரர்களுடனும் மோதல் இல்லை. இப்போது, இந்தக் குதிரையினால் விபரீதம் வருமோ என்று அஞ்சுகிறேன் சுவாமி!”

“வராது. நம் எண்ணங்களில் களங்கம் இல்லை ...”

“வெறும் குதிரை மட்டும் வந்திருக்குமா? பின்னே ஒரு படை வந்திருக்குமே?”

“ஆம் மகளே, கோசல மன்னன் சக்கரவர்த்தியாக வேண்டுமே? படைகள் நாலுபக்கங்களிலும் இருக்கும். குதிரையை ஆறு தாண்டி எவர் அனுப்பி இருப்பார்கள்? ஒன்று மட்டும் நிச்சயம். நம் பிள்ளைகள் என் ஆணையை மீறி வில் அம்பு எடுக்க மாட்டார்கள். ஆனால், மிதுனபுரிக்காரர்கள், இந்தப் பூச்சிக் காட்டு வேடர்களுடன் சேரும்படி, ஏதேனும் நிகழ்ந்தால்... அப்படி நிகழக்கூடாது என்று அஞ்சுகிறேன். ஏனெனில், இவர்களும் நச்சுக்கொட்டை - நரமாமிச பரம்பரையில் வந்தவர்கள். வழிதிரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சத்தியத்திலிருந்து அசத்தியத்துக்கு ஒரு நொடியில் சென்றுவிடமுடியும்!.... எதற்கும் நீ கலைப்படாமல், கலக்கம் இல்லாமல் இருப்பாய். நான் அக்கரை சென்று, யாகக் குதிரையுடன் யார் வந்திருக்கிறார்கள், யாகம், யார் எங்கே செல்கிறார்கள் என்பன போன்ற விரிவான தகவல்களைப் பெற்று வருகிறேன்...”

அவர் விடை பெற்றுச் செல்கிறார் என்றாலும் பூமகளுக்கு அமைதி கூடவில்லை.