பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

215

"வனதேவி, யாகக் குதிரைன்னா என்ன அது? வெள்ளையாக இருந்தா யாகக் குதிரையா?”

“எனக்குத் தெரியாது, புல்லி அக்கா!”

“வனதேவிக்குத் தெரியாதது இருக்குமா? பெரியம்மா, நீங்க சொல்லுங்கள்!”

“அது வர்ற எடமெல்லாம் ராசாக்கு சொந்தம்னு அர்த்தம். முதல்ல நச்சுக்கொட்ட அம்பு தயாரா வச்சிக்குங்க!” என்று பெரியம்மை கடித்துத் துப்பும்போது திக்கென்று பூமகள் குலுங்குகிறாள்.

“அய்யோ, அதெல்லாம் வானாம்மா! நாம குதிரைய அவுத்துவிட்டாப் புடிச்சிட்டுப் போறாங்க. அது என்னமோ வழிதவறி வந்திட்டது.”

உழைப்பின் அயர்வில் அவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். வேடர்குடிப் பிள்ளைகள் சற்று எட்டி உள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றுவிட்டனர். புல்லி இங்கேதான் முற்றத்தில் உறங்குகிறாள். பசுக்கள் கொட்டிலுக்குள் திரும்பிப் படுத்துவிட்டன. உறங்காத இரண்டே உயிர்கள். அவளும் அன்னையுமே. அவர்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய இருக்கின்றன. ஆனால் பேச்சு எழவில்லை.

ஒரு சிறு அகல் விளக்கு குடிலின் மாடத்தில் எரிகிறது. கீழே மூதாட்டி கருணை போல் குந்திக் கொண்டு இருக்கிறாள்.அருகில் வனதேவி, ஒரு புல் மெத்தை விரிப்பில் படுத்திருக்கிறாள். உறக்கம் பிடிக்கவில்லை. கடந்தகாலத்துக் காட்சிகள். படம் படமாக அவிழ்கின்றன. அவந்திகா, தேர் கிளம்பும் சமயத்தில் பெட்டியைத் தூக்கி வந்ததும், அப்படியே பார்வையில் இருந்து மறைந்ததும். “அடி, சாமளி ஏதேனும் நல்ல பண், பாடு என்றால் துக்கம் இசைக்கிறாயே?” என்று கடிந்த காட்சி. “அம்மா, இது, இளையராணி மாதா அனுப்பிய பானம், பருகினால் சுகமாக உறக்கம் வரும்.” பொற்கிண்ணத்தில் வந்த அந்தப் பானம்.