பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வனதேவியின் மைந்தர்கள்

அவள் பிஞ்சுப்பாதம் பதித்தோடும் ஐந்து வயசுச் சிறுமியாகிறாள்.

பாத சரங்கள் ஒலிக்க, படிகள் இறங்கி, கீழ்த்தளத்து முற்றத்துக்கு வருகையில், அந்த ஒற்றை நாண் இசைக்கருவிக்குரியவர் செய்குளம் தாண்டி வருகிறார்.

உச்சியில் முடிந்த முடி; அடர்த்தி தெரியாத தாடி. எலும்பு தெரியும் வெற்று மேனி. வற்றி மெலிந்த முகத்தின் கண்களில் எத்தகைய அமைதியொளி! மகிழ்ச்சிப்பெருக்கு அவளை ஆட்கொள்கிறது.

அவர் கண்களை மூடியிருக்கிறார். சொற்கள் வரவில்லை. விரல் மட்டும் அந்த ஒற்றை நாணை மீட்டுகிறது.

“நீ தந்தையின் மகள்தான்; என் தாய் உன் தாயல்ல. உன் தாய் பூமிதான். அதனால்தான் நீ பூமை, பூமகள் என்று பெயர் பெற்றாய்... கணவர் கானேறியதும், அவள் தாய்வீடு சென்றாள். ஆனால் உன் தந்தை உனக்குக் கூறிய அறிவுரை... உன் நாயகர் இருக்கும் இடம்தானம்மா, உனக்குத் தலை நகரம், மாளிகை, எல்லாம்....! உனக்கு இனி அவர்தாம் சகலமும்...” தந்தையின் சொற்கள் காரணம் தெரியாமல் செவிகளில் மோதுகின்றன. அவள் “சுவாமி!” என்று கண்ணீர்மல்க அவர் பாதங்களில் பணிகிறாள். “குழந்தாய், எழுந்திரம்மா, நலமாக இருக்கிறாயா?...”

அவர் காலடித்துகளைச் சிரத்தில் அணிந்தவாறே, மகிழ்ச்சி பொங்கும் குரலில் “அவந்திகா, தெரியவில்லை? நந்தசுவாமி, நந்த பிரும்மசாரி... என் தாய் இவர்... நீ ஒரு தாய், இவர் ஒரு தாய்... இன்னும், சுவாமி, பெரியம்மா, அம்மம்மா... அவர் சுகமாக இருக்கிறாரா?.. ஊர்மிக்கு ஒரு தாய்தான். எனக்கோ எத்தனை பேர் என்று விரல் மடக்குவேனே?... குழந்தை, பூதலம் உனக்குத் தாய்... நீ பூமிக்குத் தாய் என்பீர்களே?.” என்றெல்லாம் மடைதிறக்கிறாள். அவந்திகா அருகில் வந்து அவரைப்பணிகிறாள். “சுவாமி, உள்ளே வரவேண்டும். இந்த சமயத்தில் தாங்கள் தெய்வத்திருவருளே போல் வந்திருக்கிறீர்கள். குழந்தையை ஆசீர்வதியுங்கள் சுவாமி..”