பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

221

“குதிரையை நாங்கள் கட்டிப்போடவில்லை; நீங்கள் அழைத்துச் செல்லலாம்” என்று நந்தமுனி கூறுகிறார்.

காவலர்களில் ஒருவன் குதிரையின் அருகில் சென்று அதன் பின்புறம் தட்ட முற்படுகிறான். மின்னல் வெட்டினாற்போல் இருக்கிறது. அடுத்த கணம் அவன் எங்கோ மரத்தில் சென்று மோதச் சுருண்டு விழுகிறான். குதிரை ஓர் எழும்பு எழும்பிச் காற்றாய்ப் பறந்து தாவரப் பசுமைகளுக்கு அப்பால் செல்வதும் தெரிகிறது.

பூமகள் கண் கொட்டாமல் நிற்கையில் பிள்ளைகள் எல்லோரும் ஹோவென்று கைகொட்டிச் சிரிக்கின்றனர் அரசகுமாரனுக்கு முகம் கறுத்துச் சிறுக்கிறது. நந்தமுனிதான் அமைதியாக, “குதிரை சென்று விட்டது அரசகுமாரா கூட்டிச் செல்லுங்கள்!” என்று கூறுகிறார். நீலனும் சாம்பனும் குதிரை உதைவிட்டதைப் போல் செய்து காட்டிச் சிரித்து மகிழ்கின்றனர் அரசகுமாரன், அந்தக் காவலனுடன் திரும்பிச் செல்கிறான்.

பூமகள் பெருமூச்செறிகிறாள்.

“பிள்ளைகளே, விளையாடியது போதும் காலைக்கடன்களை முடியுங்கள்.” என்று அவர்களைத் தூண்டி விட்டபின் அவள் தன் பணிகளில் ஈடுபடுகிறாள். வழக்கம்போல் நீராடி அகழ்ந்தெடுத்த கிழங்குகளைப் பக்குவம் செய்ய, அக்கினியை எழுந்தருளச் செய்ய முனைகிறாள். பிள்ளைகளும் அவளுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சுற்றியுள்ள மண்ணனைக்குள் தீக்குண்டம். பானை, நீர், கிழங்கு, இந்த அக்கினி உயிர்களை வதைக்காது; வாழ வைக்கும்.

“சத்தியத்தின் நித்தியமாக ஒளிர்பவரே!

ஒரு குழந்தை தந்தையை அணுகும் எளிமையுடன் அணுகுகிறோம். எங்களுக்கு நயந்து, எந்நாளும் அருள் பாலிப்பீராக! உங்கள் மக்கள் யாம்! எங்களை வாழவைப்பீர்!”

குண்டத்தில் தீக்கங்குகள் மாணிக்கமாய் மின்னுகின்றன