பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

வனதேவியின் மைந்தர்கள்

வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் பெருமையை அறியாமல் குதிரையை, மடக்கி வைத்திருக்கிறீர்கள்! நாங்கள் உங்களையே கட்டித்தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிஇருக்கும்!”

“ஆஹாஹா...” என்று விஜயன் சிரிக்கிறான்.

“நாங்கள் குதிரையைக் கட்டியா போட்டிருக்கிறோம்? அதுவாக வந்தது. நீங்கள் கை வைத்தால் உதைத்துத் தள்ளுகிறது. அந்தக் குதிரையை விரட்டி ஏவி விட்டதும் நீங்கள். இப்போது நாங்கள் மடக்கி இருக்கிறோம் என்று பழிசுமத்துகிறீர்கள்! உங்கள் தருமம் மிக நன்றாக இருக்கிறதைய்யா!...” என்று அஜயன் கேட்கும்போது பூமகள் பூரித்துப் போகிறாள்.

“குதிரையை ஓட்டிச் செல்ல முடியாத நீங்கள், எங்களைத் துக்கிச் செல்லப் போவதாக அச்சுறுத்துகிறீர்கள்! என்ன நியாயமய்யா? உங்களுக்கு முடிந்தால் குதிரையைத் துக்கிச் செல்லுங்கள்! அதை விடுத்து வீணாக நீங்கள் வேறு வழிகளில் இறங்கினால் நாங்களும் கையைக் கட்டிக் கொண்டிருக்க மாட்டோம்.”

பூமகள் மறைவிடத்தில் இருந்து வருகிறாள்.

“வேண்டாம் குழந்தைகளே, நாம் நம்மிடம் செல்வோம். எழுந்திருங்கள். அவர்கள் குதிரையைப் பற்றிக் கொண்டு செல்லட்டும்!”

அவள் தன் மைந்தர்களையும் வேடப்பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நந்தமுனி பாடுகிறார்; மாதுலன் குழலிசைக்கிறான். இரவு தீப ஒளியில், மகிழ்வுடன் உணவுண்டு, ஆடிப்பாடிக் களைத்து எல்லோரும் உறங்குகின்றனர். பூமகளும் துன்ப நினைவுகளைத் துடைத்து விட்டு உறங்குகிறாள்.


24

அதிகாலையில் புள்ளினங்களின் ஓசை கேட்டதும், அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தடாகக் கரைக்கு வருகிறாள்.