பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வனதேவியின் மைந்தர்கள்

“தாயே, பெற்றவர் கை கழுவினர் வளர்த்தவர் கை கழுவினார்; கணவர் கை கழுவினார். இப்போது, என் உதரத்தில் ஊறிய இவர்களை நான் அனுப்புவேனா? மாட்டேன். அவர்கள் என் உயிரின் உயிர்!”

மூதாட்டி வாஞ்சையுடன் அவள் முகத்தை இதமாகத் தடவுகிறாள்.

“உனக்கு உன் நாயகர், குழந்தைகளுடன் சேர வேண்டும் என்ற தாபம் இல்லையா?”

அவள் சிறிது நேரம் பேசவில்லை.

“அந்தத் தாபம் குளிர்ந்து சாம்பற் குவியலாகி நெடு நாட்களாகி விட்டன. தாயே!”

ஊனுறக்கமின்றி அன்றிரவுப் பொழுது ஊர்ந்து செல்கிறது. அதிகாலைப்பொழுதில் யாரோ சங்கு ஊதுகிறார்கள். அது வெற்றி முழக்கச் சங்காக இல்லை. நரிகளின் ஊளையொலிபோல் ஒலிக்கிறது. திடுக்கிட்டு அவள் வெளி வருமுன் பிள்ளைகளின் அரவம் கேட்கிறது. வேடுவப் பெண்களின் அலறலொலி உதயத்தின் கீழ்வானச் செம்மையை குருதிக்குளமாகக் காட்டுகிறது.

“என்ன அநியாயமம்மா! மாயன், நீலன், பூவன் எல்லோரும் மாண்டு மடிந்தார்கள். குரு ஏனம்மா, அம்பெடுக்க வேண்டாம் என்று சொன்னார்? அவர்கள் நம் விளை நிலங்களை அழித்தார்கள்...”

அவள் தன் இரு மைந்தர்களையும் தழுவிக் கொள்கிறாள். அப்போது அங்கே, அந்த யாகக் குதிரை, பட்டுப் போர்வை கிழிக்கப்பட்டு, பொன்மாலை அகற்றப்பட்டு மங்கலமிழந்த நிலையில் வந்து கனைக்கிறது.

“ஏ குதிரையே? நீ வந்த வழியே திரும்பிச் செல்! எங்கள் அமைதியில் இப்படிப் புகுந்து கொலைக்களமாக்கினாயே! போய்விடு!” அவள் அதன் பின் பக்கத்தைப் பிடித்துத் தள்ளி விடுகிறாள்.