பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

235

"அம்மா, மாயன், நூறு நூறாக அவர்கள் படையைக் கொன்று குவித்துவிட்டான். நாங்கள் குரு சொல்லை மீறவில்லை மரக்கொம்புகளையும் கற்களையுமே எறிந்து தற்காத்துக் கொண்டோம்...”

“நந்தசுவாமி எங்கே ?..”

“அவர் ஆற்றங்கரையில் நின்று சந்திரகேதுவைப் பின் வாங்கச் சொன்னார். நம் முனிவர். தூது சென்றுள்ளார். வரும் வரையிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது என்று சொல்லிக் கொண்டிருந்தபோது தான் மாயனின் நச்சம்பு, படையினரின் மீது பாய்ந்து கொன்றது. சந்திரகேது கூட மூர்ச்சையாகிவிட்டான் என்று நளன் கூறினான். நாங்கள் ஆற்றிலிறங்கி இக்கரை வந்து, ஓடிவருகிறோம்...”

“நந்தமுனி எங்கே ?...”

அவள் மனம் கட்டுக்கடங்காமல் நின்று கனைக்கிறது.

பிள்ளைகள் விரைகின்றனர்.

அடுத்த கணம், ‘அம்மா.....!’ என்ற ஒலி கானகம் முழுதும் எதிரொலிக்கிறது..

உதயத்தின் கதிர். நந்தமுனிவரின் நிச்சலன முகத்தில் வீழ்கிறது.


25

அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போரா? இரவு நேரத்தில் நடந்த வன்முறையா? எப்போது பிள்ளைகள் ஆறு கடந்தார்கள்? எப்போது மாயன் அவன் கூட்டத்தாரின் மானம் காக்க நச்சம்பு விட்டான்? படைகள் திரும்பி அம்பெய்தி... கூட்டத்தில் யார் வேண்டுமானாலும், மாடு கன்று, பறவை மனிதர் மரம் மட்டை என்று அழிக்க முனைந்தார்களா?...

குனிந்து நந்தமுனியை அசைவற்று நோக்குகிறாள்.