பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

239

அந்த அம்மை முனிவரின் பாதங்களில் நெற்றியை வைக்க முன் நகருகிறாள். அவர் குனிந்து அவளைத் துாக்குகிறார்.

“தாயே, நான் வந்தனைக்குரியவன் அல்ல. தாங்களே வந்தனைக்குரியவர்கள். எனக்கு இந்த மரியாதை உகந்ததல்ல. தங்களுக்குக் கொடுத்த வாக்கை, என் எல்லையில் வன்முறை நிகழாது என்ற வாக்கை, நான் நிறைவேற்றத் தவறிவிட்டேன்.” என்று அரற்றுகிறார்.

பூமகளுக்கு இதெல்லாம் கனவோ, நினவோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரமையில் நின்றவள். அங்கு கோசலத்து பணி மாதா கேகயத்து அன்னை வந்ததையோ, அவந்திகா உரத்த குயலில் கதறியதையோ கூடப் புரிந்து கொள்ளவில்லை.

அவரை, வில்வமரத்தின் பக்கம் அம்பு தைத்திருக்க வேண்டும் என்று இடம் காட்டுகிறான், சோமன். அங்குதான் நாலைந்து அம்புகள் மரத்திலும் கீழும் சிதறி இருந்தனவாம். அங்கிருந்து நடந்து வந்து வீழ்ந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இறந்தவரின் சடலங்களை எல்லாம் கொண்டு வந்து, வேதவதியில் இருந்து நீர் கொணர்ந்து வந்து அந்திமம் செய்கிறார்கள். நந்தமுனிவரின் அருகில் மாயன், பூவன், நீலன். எல்லோரும் இடம் பெருகிறார்கள். நந்தமுனியின் தம்பூரை, அஜயன் எடுத்துக் கொள்கிறான்.அதைக் குழியில் வைக்க அவன் அநுமதிக்கவில்லை.

மாதுலன் தன் சோகமனைத்தையும் கரைக்கும் வண்ணம் இசைக்கிறான். தேனாய், தீயாய், தீங்குழலாய் அது கானகத்தில் ஒலிக்கிறது. வானத்து ஒளிமங்க, கரும்பட்டுப் படுதா விரிகிறது. ஆயிரமாயிரமாக விண்மீன்கள் அவர்களை வரவேற்க உதய மாகின்றன. சத்திய முனி குரலெழுப்ப, அஜயன் அந்த ஒற்றை நாண் யாழை மீட்ட, அது ஒம். ஒம். ரீம் என்று ஒலிக்கிறது.


          “எங்கள் அன்னை நீ! இறைவி நீ!
          நீயே நாங்கள்! நாங்களே நீ!
          வையம் நீ வானம் நீ!
          இந்த நீரும், மாமரங்களும், மூலிகைகளும்,