பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

241

கருநிழல் இந்த பூமியில் படிந்துவிட்டது. மண் அன்னை தன் மக்களுக்கு அமுதுTட்ட கோத்திரம் பார்ப்பதில்லை: குலம் பார்ப்பதில்லை. ஆனால். மனிதகுலம் எந்நாள் தம்மைப் பெற்ற அன்னைக் குலத்துக்கு இத்தகைய விலங்குகளைப் பூட்டிற்றோ அந்நாளே பாவத்தின் கருநிழல் இந்தச் சமுதாயத்தில் படிந்து விட்டது!...”

பூமகளின் இந்தக் குரலை எவரும் கேட்டதில்லை.

அமைதித் திரை கொல்லென்று படிகிறது.

சத்திய முனிவர் அவள் அருகில் வருகிறார்.

அவள் முடியில் கை வைக்கிறார். “மகளே, அமைதி கொள். பாவம், புண்ணியம், இருள், ஒளி ஆகிய இருமைகள் வையகத்தின் இயக்கத்தில் வரும் இயல்புகள். அந்த இரண்டையும் கடந்த மேலாம் ஞானத்தை எய்தும் முயற்சியே அமைதிப்பாதை அமைதி கொள்வாய்.”

“தாயே, நீங்கள் சொல்லும் செய்திகள் புரியவில்லை. கோத்திரமில்லாதவர் என்பவர் யார்? அந்தக் கருநிழல் எப்படி உங்கள் மீது விழுந்தது? நாங்கள் துடைத்தெறிவோம்.”

பூமகள் மக்களை அனைத்துக் கொள்கிறாள்.

“மக்களே, நான் பேறு பெற்றவள். என்பதும் உங்கள் மீதும் எந்தக் கருநிழலும் விழாது. இந்த வனமே பாவனமானது.”

அப்போதைக்கு இந்த வினாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதே தவிர, பூமகளின் உள்மனம் ஒலமிட்டுக் கொண்டுதானிருக்கிறது.

நந்தமுனி வீழ்ந்தபிறகு, மிதுனபுரி மக்கள் வாளாவிருப்பரா? மாயனும், பூவனும் நீலனும் அழிந்தபிறகு இந்த மக்களும் இன்னமும் அஹிம்சை என்று கைகட்டி இருப்பாரோ? விஜயன். விஜயனின் துடிப்பை, கிளர்ச்சியை அவளால் உணரமுடிகிறது. அஜயன் அவள் பக்கம் இருப்பான். ஆனால் விஜயனின் உடலில் அன்னை கூறினாற்போல் க்ஷத்திரிய இரத்தம்தான் ஒடுகிறது.

வ.மை- 16