பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

243

யாவாலி அன்னையின் சமாதி மேட்டுக்கருகில் இருந்து, அவர் நெஞ்சுருகக் காலை வணக்கம் சொல்லி இறைஞ்சுகிறார்.


          “வானும் மண்ணும் அமைதியடையட்டும்
          வளி மண்டலம் அமைதியடையட்டும்!
          நீரும் காற்றும் அமைதியடையட்டும்!
          உயிரின் துடிப்புகள் விளங்கட்டும்!
          தறிகெட்ட ஒலிகள் சீர் பெறட்டும்!
          சுருதியும் இலயமும் இணையட்டும்!
          சோகங்கள் யாவும் கரையட்டும்!
          சுருதி நாயக உனை நம்பினோம்!


26

மழையில் நனைந்தவண்ணம், கனிகளும் கிழங்குகளும் சேகரித்து வந்து பிள்ளைகள் குடிலில் வைப்பதைப் பூமகள் எடுத்துச் சீராக்கிப் பதனமாக வைக்கிறாள்.

நெருப்பு. அதைக் காத்து வைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. பசுக்களும் காளைகளும் அழிந்து போன நிலையில் சான எரி முட்டைகள் சேமிக்கப்படவில்லை. கிழட்டுக் காத்யாயனிப்பசு மட்டுமே ஒர் ஒரம் ஒண்டி இருக்கிறது. காட்டு நாய்கள், மரக்கிளைகளில் தங்கி இருக்கும் பறவைகள் அவ்வப்போது தங்கள் மீதுள்ள நீரை விசிறியடிக்கும்போது மேனிகளை ஆட்டி அசைக்கும் ஒசைதான், மழையின் இசைக்குத் தாளமாக இருக்கிறது.

கல்திரிகையில் அவந்திகாவும் ரீமுவும் தானியம் அரைக்கிறார்கள்.

“குழந்தாய்.” என்று குரல் எழுப்பும்போதே அவந்திகாவுக்கு உணர்வுகள் மேலோங்கித் தழுதழுக்கிறது.

அந்த மாவில் சிறிது தேனை ஊற்றிப் பிசைந்து, கரைத்துப் பிள்ளைகளுக்கு ஊட்டமாகக் கொடுக்கிறார்கள்.