பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

245

கேகய மன்னனின் புதல்வி நான். ஆனால் என்னை வளர்த்தவள் என் அன்னை அல்ல. அந்த அன்னை, என் தந்தையிடம், அவளுக்குத் தெரிவிக்காத இரகசியம் ஒன்றைச் சொல்லும்படி வற்புறுத்தினாள். காரணம் ஒன்றுமில்லை. அவருக்கு ஈ எறும்பு, பறவைமொழிகள் எல்லாம் தெரியுமாம். அவை ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தன. இவர் சிரித்தார்; அருகில் இருந்த என் அன்னை ஏன் சிரிக்கிறீர்கள் என்றுகேட்டாள்.

‘உனக்குச் சொல்ல முடியாது’ என்று மறுத்தார். ஏன், ஏன். என்று அவள் கேட்டபோது, அதைச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். இந்த அரசர்கள் நாளொரு மங்கையரை விரும்பி மாளிகைக்கு கொண்டு வரும் வழக்கம்தானே? என் தாய் சந்தேகப்பட்டுச் சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். சொன்னால் தலை வெடித்துவிடும்’ என்று எந்த முனிவனோ அச்சுறுத்தினானாம். அதற்காகப் பிடிவாதம் பிடித்த என் அன்னையை, என் தந்தை அங்கேயே பாழுங்கிணறொன்றில் தள்ளிவிட்டார் என்ற செய்தியை நான் எப்படி அறிவேன்? அன்னைக்காக நள்ளிரவிலும், பகலிலும் கூவி அழுவேன். மந்தராதான் என்னை அரவணைத்து வளர்த்தவள்.அரசகுலத்தின் துரோகங்களை அறியாத பணிப் பெண்டிர் யார்?.

அப்போது, இந்தப் பூமகளைக் கானகத்துக்கு அனுப்ப அவளே கருவியானாள். ஆனால் சகோதரி, பெற்ற மகளாலும் வெறுத் தொதுக்கப்பட்ட பாவி நான். இந்த சீதேவியை, கருப்பிணியாகக் கானகத்தில் விட்டுவா என்று சொன்னவனின் குடையின் கீழ் நான் முள்ளில் இருப்பது போல் இருந்தேன். சகோதரி, உங்கள் வரலாற்றை அறிவதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. இந்த பூமகளை, அந்த நிலையில் அரவணைத்து அன்புடன் பேணி வாழ வைத்திருக்கிறீர்கள். இதுவே என் வாழ்வில் நான் அடையும் அமைதி.”

மழை பயிர்களை, உயிர்களைத் தழைக்கச் செய்கிறது. குளம், குட்டைகள், ஆறுகளில் மீன்கள் களித்துப் பெருகுகின்றன. நெருப்புக் காத்துப் பக்குவப்படுத்தி, பிள்ளைகளுக்காக மாதுலன் மீனுணவு கொண்டு வருகிறான்.