பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

255

ஒடுகிறது. அசோகமரத்தடியில்தான் அன்னை இருக்கிறார் போலும்!

பேச்சுக் குரல் கேட்கிறது.

மெல்லிய இழையைச் சுண்டினால் ஏற்படும் அதிர்வுகள் போல் அதிர்வுகள்.

“தாங்கள் யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் தனியே வரலாமா? தங்கள் விருப்பம் இதுவென்பதை அறிவித்திருந்தால் தக்க பாதுகாப்புடன் கூட்டிக்கொண்டு வந்திருப்போமே, தாயே!”

இவர். குரலுக்குரியவர். இளையவர்.

“ஆமாமப்பா பாதுகாப்பாக வனத்தில் கொண்டு வந்துவிடுவதில் அநுபவம் வாய்ந்த பிள்ளையாயிற்றே!. இப்போது என்னைத் தேடி இங்கு வர, உன் தமையன், சக்கரவர்த்தி ஆணையிட்டானா?.”

“மன்னிக்க வேண்டும் தாயே! தமையனாரும் இங்கு வந்துள்ளார்: அக்கரையில் இருக்கிறார்.”

பூமகளுக்கு உடல் முழுவதும் குப்பென்று வெம்மை பரவுகிறது. கையில் பற்றியுள்ள முறம் நழுவுகிறது.

அவர் வந்திருக்கிறாரா? எதற்கு எதற்கு?

வில்லும் அம்புமாய், யாகக்குதிரையை மீட்டுச் சென்று யாகத்தை நிறைவேற்ற வந்திருக்கிறாரா? குலகுரு, குலமில்லாத குரு என்று தர்மசாத்திரங்கள் அனுப்பி வைத்திருக்கின்றனவா?

ராணிமாதாவின் வினாக்களை ஏந்த அவள் செவி மடல்கள் சித்தமாகின்றன.

“ஏனப்பா? யாகக் குதிரை யாகம் வேண்டாம் என்று அடைக்கலம் புகுந்திருப்பதை அறிந்து அதைப் பற்றிச் செல்ல வந்தீர்களா? அது யாகக் குதிரையுமில்லை; போகக் குதிரையு மில்லை. எந்தப் பொற்பிரதிமை பட்ட மகிஷியையும் அது மகிழ்விக்காது!”