பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

257

இப்போது ஒர் அக்கினிப் பிரவேசம் செய்து அழைத்துக் கொண்டு அசுவமேதம் புதிதாகச் செய்யலாம் என்றார்களா?”

“தாயே, மன்னருக்கு தேவியைப் பிரிந்திருந்த காலம் சுகமென்று கருதிவிட்டாற்போன்று சொல்லால் சுடுகிறீர்கள். அவர் படும் வேதனை சொல்வதற்கரியது. இப்போது யோசனை நான் சொல்கிறேன். குழந்தைகள் இருவரும் சென்று தந்தையைப் பார்க்க வேண்டும். அவருடைய புண்ணான இதயத்துக்கு அது ஒரளவு ஆறுதலாக இருக்கும். நான் குழந்தைகளை அழைத்துச் செல்ல அநுமதி தர வேண்டும்.”

பூமகள் இதை எதிர்பார்க்கவில்லை.

அஜயனும் விஜயனும் அங்குதான் நிற்கிறார்கள். ஆனால் சத்தியமுனிவர் இதில் தாம் தலையிடக்கூடாதென்று கருதினாற் போன்று, “மகளே வந்திருப்பவர் நம் விருந்தினர். அவரை முற்றுத்துக்கு அழைத்துச் சென்று, நீரும் இருக்கையும் தந்து உபசரிக்க வேண்டும். பிறகு மாதாவின் யோசனைப் படி செய்யுங்கள்” என்று கூறிவிட்டு நழுவுகிறார்.

பூமகள் நீர் கொடுக்கிறாள்; அவந்திகா இருக்கையளிக்கிறார். கனிகளும், தாவர உணவுமாகக் கொண்டு வைக்கின்றனர்.

“தேவிக்கு வணக்கம்” என்று நடுங்கும் குரலில் கூறி இளையவன் அவளை வணங்குகிறான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

கேகய அன்னை, பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொள்கிறாள்.

“குழந்தைகளே, உங்கள் தந்தை கோசல மாமன்னரைச் சென்று பார்க்கிறீர்களா? அக்கரையில் தங்கி இருக்கிறாராம்! அசுவமேதக் குதிரையை இங்கு அனுப்பியவர். உங்களுக்கு வேறு ஏதேனும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குதிரையை மீட்டுவிடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. நீங்களும் க்ஷத்திரியர்தாம். போர் செய்வீர்களா?”