பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வனதேவியின் மைந்தர்கள்

“சுவாமி, என்னைக் குஞ்சம்மை என்று கூப்பிடும் அந்தத் தாயை எப்படிப் பார்ப்பேன்? நான் மணமாகி மன்னருடன் இரதத்தில் புறப்படும் நேரத்தில் இந்தக் கனியுடன் ஓடோடி வந்தார். எனக்கு இறங்கி ஓடிச்சென்று, அறியாப்பருவத்தில் ஆடையை விரித்துச் சித்திரமாக வைத்து அக்கனிகளை, அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டே உண்ண வேண்டும் என்று தோன்றிற்று. ‘ம்... நேரமாகிறது, இரதத்தை ஓட்டப்பா!’ என்று மாமன்னர் ஆணையிட, குதிரைகள் பறந்து சென்றன.”

அவளுடைய ஆற்றாமை பொல பொலவென்ற சொற்களாகக் கொட்டுகிறது “மகளே, பெரியம்மை, உன்னை எப்போதும் நினைவு கூருகிறாள். “அவள் சக்கரவர்த்தி மருமகள், திருமகள், இப்போது, இந்தப் பஞ்சை யார்?” என்பாள். ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சிதான் உள்ளூர. இப்போது நானும் யாவாலி ஆசிரமம் விட்டு வெகுகாலமாகிவிட்டது. நான் அங்குதான் போகிறேன். உன் செய்தி எல்லாம் சொல்வேன்!”

“சுவாமி... நான் பெரியன்னையை எப்போதும் நினைத்துக் கொள்வேன். அவர் அப்படி ஓர் உயர்ந்த தோற்றம் உடையவர். அசோக வனத்தில், எனக்குத் துணைபோல் வந்த பெண்களில் ஒருவர் அப்படிப் பெரியன்னை போலவே இருப்பார். அவர் என்னிடம் வாய்திறந்து மற்றவர் போல் அரக்க மன்னனின் புகழ்பாடமாட்டார். என்னை எட்ட இருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்.

வயதானதால் கூந்தல் நரைத்திருக்கும். விரித்துக் கொண்டிருப்பார். கைகளில் காப்புகளும் மார்பில் மணிமாலைகளும் அணிந்திருப்பார்.

ஒருநாள் அவரே அருகில் வந்து, “பெண்ணே , மன்னர் ஆணைக்காக மட்டும் நான் இங்கு காவல் இருக்கவில்லை, உன்னைப் போல் ஒரு மகள் வேண்டும் என்று நான் பல காலமாக விரும்பி இருந்தேன். நீ எங்கேனும் உயிரை மாய்த்துக் கொண்டுவிடுவாயோ என்ற அச்சமே என்னை இங்கே இருத்தி வைக்கிறது. உன் கூந்தலை வாரி முடித்து மலர் அலங்காரம் செய்து